ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் 'வாரிசு' படத்தை திரையிடுவது தொடர்பாக ஏற்பட்ட சிக்கல் முடிவுக்கு வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பேட்டியளித்துள்ள அப்படத்தின் தயாரிப்பாளரான 'தில்' ராஜு, பொங்கல் பண்டிகைக்கு 'வாரிசு' படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக ஏற்கெனவே அறிவித்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
அச்சமயம் சில தெலுங்குப் படங்கள் வெளியாவது தமக்குத் தெரி யும் என்றும் அவற்றை திரையிட்ட பிறகும்கூட 'வாரிசு' படத்தை கணிசமான எண்ணிக்கையிலான திரையரங்குகளில் வெளியிட இயலும் என்றும் தில் ராஜு கூறியுள்ளார்.
"பிரபாஸ் நடித்த 'ஆதி புருஷ்' படமும் பொங்கலுக்கு வெளிவருவதாக அறிவித்திருந்தார்கள். இதனால் 'வாரிசு' படத்துக்கு சிக்கல் வந்திருக்கும். மேலும் மூன்று படங்கள் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 'ஆதி புருஷ்' வெளியீடு தள்ளிப்போனது.
"என்னைப் பொறுத்தவரையில் 'வால்டர் வீரய்யா', 'வீர சிம்மா ரெட்டி', 'வாரிசு' படங்களை வெளியிட தெலுங்கானா, ஆந்திராவில் போதுமான அளவிற்குத் திரையரங்குகள் உள்ளன.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள 'வால்டர் வீரய்யா', 'வீர சிம்மா ரெட்டி' படங்கள் அதிக பொருள் செலவில் தயாராகி உள்ளன. ஒரே தயாரிப்பு நிறுவனம் இரண்டு படங்களை ஒரே நாளில் வெளியிடுவது இதுவே முதல் முறை. 'வால்டர் வீரய்யா' படத்தை ஜூன், ஜூலை யில் வெளியிடுவது பற்றி அறிவித்தார்கள். 'வீர சிம்மா ரெட்டி' படத்தின் வெளியீடு அக்டோபரில் என அறிவித்தார்கள்.
"அந்நிறுவனத்துடன் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர்களது முந்தைய படங்கள் பலவற்றை நானே வெளியிட்டுள்ளேன். பிரச்சினையை ஏற்படுத்தியது தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம்தான். குறைந்த எண்ணிக்கையிலான திரையரங்குகளை மட்டுமே நான் குத்தகைக்கு எடுத்துள்ளேன். எனவே, என்னால் பிற படங்களின் வெளியீட்டுக்குப் பாதிப்பு இருக்காது. ஆனால் எனது நிறுவனத்துடன் சம்பந்தப்பட்ட படம் என்பதால் சில தரப்பினர் பிரச்சினை எழுப்புகிறார்கள்," என்கிறார் தில் ராஜு.
, :

