நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நாயகனாக நடிக்கிறார் கவுண்டமணி.
படத்துக்கு 'பழனிச்சாமி வாத்தியார்' எனத் தலைப்பு வைத்துள்ளனர். கதைப்படி ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் கவுண்டமணி. இந்தப் படத்துக்காக அவருக்குப் பெருந்தொகை ஊதியமாக வழங்கப்படுகிறதாம்.
படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி நடிகர் அருண் விஜய்க்கு காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது 'அச்சம் என்பது இல்லையே' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் அருண் விஜய். இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் சண்டைக்காட்சியில் நடித்தபோது அருண் விஜய்க்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. எனினும் வலியைப் பொறுத்துக்கொண்டு நடித்தாராம்.
உடல்நலக் குறைவால் ஓய்வெடுத்து வரும் சமந்தா, இப்போது ஆயுர்வேத சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல். இதற்கு நல்ல பலன் கிடைத் துள்ளதாம். எனவே மிக விரைவில் அவர் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவருக்கு நெருக்கமான தோழி ஒருவர் உடனிருந்து கவனித்துக் கொள்வதாகத் தகவல்.
ஜீவா நடித்துள்ள 'வரலாறு முக்கியம்' படத்தின் முன்னோட்ட காட்சித் தொகுப்பை வெளி யிட்டுள்ளனர். அதற்கு நல்ல வரவேற்பாம். தற்போது மேலும் இரண்டு படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார் ஜீவா. அவற்றுள் முன்னணி இயக்குநர் ஒருவரது படமும் அடங்கும்.
இயக்குநர் மாரிசெல்வராஜ், உதயநிதி ஸ்டாலின் கூட்டணி யில் உருவாகும் படம் 'மாமன்னன்'. இதற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்நிலையில், இருவருடன் இணைந்து பணியாற்றியது நல்ல அனுபவமாக உள்ளது என்று கூறியுள்ளார் ரகுமான். இது தொடர்பாக காணொளிப் பதிவு ஒன்றையும் சமூக ஊடகங்களில் அவர் வெளியிட்டுள்ளார்.
நடிகை சாய் பல்லவி கோவை மாநகரில் மருத்துவமனை கட்ட இருப்பதாகத் தகவல். அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றனவாம். மருத்துவக் கல்வியை முடித்திருக்கும் சாய் பல்லவி இன்னும் தொழில்துறை மருத்துவராகத் தமது பணியைத் தொடங்கவில்லை. மருத்துவ மனை கட்டி முடிக்க சில ஆண்டுகள் ஆகும் என்பதால், அதுவரை சினிமாவில் நடிப்பது என முடிவெடுத்துள்ளாராம். அதன் பிறகு நடிப்புக்கு முழுக்குப் போடுவார் எனக் கூறப்படுகிறது.
'நேற்று இன்று நாளை' படத்தின் இயக்குநர் ரவிக்குமார், சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் கூட்டணியில் உருவாகி வருகிறது 'அயலான்'. படத்தில் கணினித் தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்தி உள்ளனர். பணப் பிரச்சினையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு இருந்தது. இப்போது படப்பிடிப்பை மீண்டும் தொடங்கி உள்ளதாகத் தகவல். எனவே அடுத்த ஆண்டு கோடைக் காலத்தில் படத்தை வெளியிடுவதற்கேற்ப படப்பிடிப்பை திட்டமிட்டு நடத்த உள்ளனராம்.
சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் ரஜினி நடித்து வெளியான படம் 'பாபா'. வசூலில் பெரிதாக சாதிக்கவில்லை. இந்நிலையில், அப்படத்தை மறு வெளியீடு செய்கின்றனர். மேலும், மின்னிலக்க தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி சில மாற்றங்களையும் செய்துள்ளன ராம். வரும் டிசம்பர் 12ஆம் தேதி படம் வெளியாகிறது. இதனால் ரஜினி மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளாராம்.

