'பிரின்ஸ்' படம் பெரிய வசூலைப் பெற்றுத் தந்ததோ இல்லையோ, அப்படத்தின் நாயகி மரியாவுக்கு ரசிகர் கூட்டத்தைப் பெற்றுத் தந்துள்ளது.
உக்ரேனில் இருந்து வந்து இந்தித் திரையுலகில் கால்பதித்த மரியா, அங்குள்ள பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தவர். பிறகு நடிப்பின் மீதான ஆர்வம் காரணமாக நடிப்புப் பயிற்சியும் பெற்றுள்ளார்.
இந்தி இணையத்தொடர் மூலம் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான மரியா, கதாநாயகி வேடங்களை எல்லாம் எதிர்பார்க்கவில்லையாம்.
தனது நடிப்புப் பசிக்குத் தீனி கிடைத்தால், அதுவே போதுமானது என்ற முடிவுடன்தான் இந்தியாவுக்கு வந்தாராம்.
"தமிழ்ப் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு எதிர்பாராத வகையில்தான் கிடைத்தது. நானும் என் மேலாளரும் இதுபோன்ற மொழிப் படங்களில்தான் வாய்ப்பு தேட வேண்டும் என்று முடிவு செய்யவில்லை. நல்ல கதாபாத்திரங்கள் அமைந்தால் மொழி எல்லாம் ஒரு பொருட்டே அல்ல என்பதுதான் எங்கள் முடிவாக இருந்தது.
"அந்தச் சமயத்தில்தான் 'பிரின்ஸ்' பட வாய்ப்பு தேடி வந்தது. நான் எதிர்பார்த்த கதாபாத்திரம் அமைந்ததால் மகிழ்ச்சி அடைந்தேன். இன்று உலகெங்கும் உள்ள தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான நடிகையாகி விட்டேன்," என்று உற்சாகத் துள்ளலுடன் பேசுகிறார் மரியா.
தரமான தமிழ்ப் படங்கள் சிலவற்றை தொடர்ந்து பார்த்து வருகிறாராம். அவற்றுள் 'வாழ்' படமும் ஒன்று.
"அந்தப் படத்தை சிவகார்த்திகேயன்தான் தயாரித்தார் என்பது எனக்குத் தெரியாது. விமானத்தில் பறந்து கொண்டிருந்தபோதுதான் பார்த்தேன். ரொம்பப் பிடித்திருந்தது.
"இப்போது இந்திப் படங் களையும் பார்க்கத்தொடங்கி உள்ளேன். இந்திய திரைத்துறை மிகப் பிரம்மாண்டமானது. இந்தியில் வெளியான '3 இடியட்ஸ்' படத்தைப் பலமுறை பார்த்தும் இன்னும் சலிக்கவில்லை," என்று சொல்லும் மரியா, தாம் உக்ரேன் குடிமகள் என்று சொல்வதில் பெருமை கொள்வதாகக் கூறுகிறார்.
தங்களுடைய வாழ்க்கைமுறை இயற்கையைச் சார்ந்துள்ளதாகக் குறிப்பிடுபவர், சூரியனை நாள்தோறும் வணங்குவதாகவும் இயற்கைதான் தங்கள் கடவுள் என்றும் சொல்கிறார்.
"எங்களுடைய வரலாறு மிகப் பழமை வாய்ந்தது. நிறைய கதைகள் உள்ளன. ஏராளமான திறமைசாலிகளைக் கொண்ட அழகான நாடு.
"ஆனால் போர்ப்பூமியாக மாறிவிட்டதால், அனைத்தும் நிலைகுலைந்து காணப்படுகிறது. கடந்த 1991ஆம் ஆண்டுதான் சுதந்திரம் பெற்றோம். அதை மனதாரக்கொண்டாடி மகிழ்வதற்குள் அடுத்த போர் தொடங்கிவிட்டது.
"அதனால்தான் கலைகளை வளர்க்க முடியவில்லை. உக்ரேனை பற்றிய கதைகள், திரைப்படங்களிலும் கூட எங்கள் மக்கள் எதிர்கொண்ட துன்பங்கள், இப்போது காணப்படும் அவலங்கள் ஆகியவற்றைத் தான் காட்சிப்படுத்துகின்றனர்.
"எங்களுடைய பெருமைகளை, கடந்த காலத்துச் சாதனைகளைப் பற்றி பேசும் காலம் விரைவில் வரும். எங்கள் நாட்டில் திறமைமிக்க பல நட்சத்திரங்கள் உள்ளனர். போர்ப் பூமியில் ஒளிரும் அந்த நட்சத் திரங்களுக்கு உரிய வாய்ப்புகள் கிடைத்தால் நிச்சயம் சாதிப்பார்கள்.
"எனக்கு கிடைத்ததுபோல் எல்லாருக்கும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கவேண்டும். அப்போது தான் கலைகள் வளரும், கலை ஞர்களும் நன்றாக இருப்பார்கள்," என்று கண்களில் நம்பிக்கை ஒளிர, தேசப்பற்றுடன் பேசுகிறார் மரியா.
பிடித்த நடிகர், நடிகையர் எனும் தனிப் பட்டியல் எல்லாம் தம்மிடம் இல்லை என்று குறிப்பிடுபவர், ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகத்தையும் ரசிகர்களையும் தாம் மிகவும் நேசிப்பதாகச் சொல் கிறார்.
மரியாவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகுமாம்.

