'லவ் டுடே' படத்தின் வசூல் தமிழ்த் திரையுலகத்தினரை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. நான்கைந்து கோடி ரூபாய்க்குள் தரமான படத்தை உருவாக்கி, அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளார் பிரதீப் ரங்கநாதன்.
இதையடுத்து, தெலுங்கு நேரடிப் படம் ஒன்றை இயக்க விரும்புவதாக பேட்டி ஒன்றில் குறிப்பிட்டார்.
'லவ் டுடே' படம் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இப்படம் வெளியான திரையரங்குகளுக்கு திரளாக ரசிகர்கள் திரண்டு வந்து படம் பார்த்து பாராட்டிச் செல்கின்றனர்.
இந்நிலையில், தெலுங்குத் திரையுலகில் முன்னணித் தயாரிப்பாளர்களில் ஒருவரான சீனிவாசா சித்தூரி தயாரிக்கும் அடுத்த படத்தை இயக்கப் போவது பிரதீப் தான். இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகிவிட்டது என சீனிவாசா தரப்பில் கூறப்படுகிறது.
மேலும், 'வாரிசு' படத்தின் தயாரிப்பாளர் 'தில்' ராஜுவுடனும் கடந்த சில நாள்களாக பிரதீப் ஆலோசனை நடத்தி வருகிறாராம்.
எனினும் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியான பிறகே எதுவும் உறுதியாகும் என்கிறார்கள் விவர மறிந்தவர்கள்.
அண்மையில், ரஜினியை நேரில் சந்தித்தார் பிரதீப். அப்போது ரஜினி தம்மிடம் பேசிய விதமும் நடந்துகொண்ட விதமும் வியப்பை ஏற்படுத்தியதாகவும் கூறியிருந்தார்.
"அவருடன் (ரஜினி) செலவிட்ட அந்த முப்பது நிமிடங்களை என் வாழ்வின் பொன்னான நேரம் என்பேன். அவரைப் போன்ற எளிமை வாய்ந்த மனிதரை நான் பார்த்ததில்லை," என்கிறார் பிரதீப்.
இதற்கிடையே, 'லவ் டுடே' படம் இதுவரை சுமார் ஐம்பது கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகத் தகவல்.

