தனது திருமணத்தின்போதும்கூட சிலர் தனது உடல் எடை குறித்து விமர்சித்திருப்பது வருத்தம் அளித்ததாகச் சொல்கிறார் மஞ்சிமா மோகன். இவருக்கும் நடிகர் கௌதம் கார்த்திக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றது. அது தொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகின. அவற்றைக் கண்ட இணையவாசிகள் சிலர், மஞ்சிமாவின் உடல் பருமன் குறித்து விமர்சித்து இருந்தனர். அவர்களுக்கு இப்போது பதிலடி கொடுத்துள்ளார் மஞ்சிமா. "நான் உடல் தகுதியுடன் இருக்கிறேன். அதில் எனக்கு மகிழ்ச்சிதான். என் வேலை தொடர்பாக உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்ற தேவை ஏற்பட்டால் கண்டிப்பாக அதைச் செய்வேன். இதுபற்றி மற்றவர்களுக்கு என்ன கவலை?" என்று மஞ்சிமா கேள்வி எழுப்பி உள்ளார்.
ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகும் 'விட்னஸ்' திரைப்படம் ஐந்து மொழி களில் வெளியீடு காண உள்ளது. வரும் 9ஆம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் இப்படத்தில் தனது கதாபாத்திரத்தில் மனம் ஒன்றி நடித்ததாகச் சொல்கிறார் ஷ்ரத்தா. 'விக்ரம் வேதா', 'ஜெர்சி', 'கே-13', 'மாறா' உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ள அவர், அண்மைக்காலமாக தமக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்து வருவதாகச் சொல்கிறார்.
இரண்டாவது திருமணம் குறித்து கனவில்கூட நினைத்துப் பார்த்ததில்லை என்கிறார் நடிகை மீனா. தமக்கு இரண்டாவது திருமணம் செய்துவைக்க குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாகவும் அதற்கு தாம் சம்மதம் தெரிவித்த தாகவும் வெளியான தகவல் முற்றிலும் பொய் என அவர் குறிப்பிட்டுள்ளார். "கணவரை இழந்த துக்கத்தில் இருந்து நான் இன்னும் மீளவில்லை. அதற்குள் இரண்டாம் திருமணம் குறித்து பேசி மன உளைச்சலை ஏற்படுத்துகிறார்கள். தற்போது நடிப்பிலும் கதைகளை தேர்வு செய்வதிலும் திரைப்படங்களில் நடிப்பதிலும் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன்," என்று சொல்லும் மீனாவுக்கு, இப்போது 46 வயதாகிறது. அவரது மகள் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து வருகிறார்.
'லவ் டுடே' படத்தின் இயக்குநர் பிரதீப்பை பாராட்டி சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார் இயக்குநர் அட்லி. "ஊக்குவிக்கும் அண்ணனுக்கு நன்றி," என பிரதீப் அதற்குப் பதில் அளித்துள்ளார்.