சாதி ஒழிப்பு குறித்த படம் 'தமிழ்க் குடிமகன்'

2 mins read
cc972b5e-7b72-4c7d-9c28-13437648481f
-

"சில குறிப்­பிட்ட சமூ­கத்­தைப் பற்றி குறிப்­பி­டும்­போது 'குடி­ம­கன்' என்று சொல்­வார்­கள். அவர்­க­ளுக்கு மேல் சாதிக்கு உதவி செய்­யும் வேலை­களைச் செய்ய வேண்­டிய நிர்ப்பந்தம் இருக்­கிறது. இதில் சிகை­ய­லங்­காரம் செய்­ப­வர்­கள், துணி துவைத்­துக் கொடுப்­ப­வர்­கள் என்று சிலர் அடங்­கு­வர்.

"இவ்­வாறு சாதிக் கொடு­மை­களைப் பற்றி வெறு­மனே மேம்­போக்­காக விவ­ரித்­துக் கொண்டிருக்காமல், நல்ல தீர்­வை­யும் முன்­வைத்­துள்­ளோம். எனது படத்­தின் அடிப்­படையே அது­தான்," என்­கி­றார் இயக்­கு­நர் இசக்கி கார்­வண்­ணன்.

இவ­ரது இயக்­கத்­தில் உரு­வாகி உள்­ளது 'தமிழ்க் குடி­ம­கன்' திரைப்­படம். இயக்­கு­நர் சேரன் முக்­கி­யக் கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­துள்­ளார்.

"திரு­ம­ணம், கொடுக்­கல் வாங்­கல், சேர்ந்து வாழ்­வது, காத­லிப்­பது என அனைத்­தி­லும் சாதி­தான் குறுக்கே வந்து நிற்­கிறது. சாதி இன்­னும் நிலை­யாக இருக்­கிறது. ஊருக்­குள் இருக்­கும் ஒவ்வொரு வருக்­கும் சாதி அடை­யா­ளம் இருக்­கிறது.

"நகர்ப்­பு­றங்­களில் சாதி வெளிப்­படை­யா­கத் தெரி­வ­தில்லை. எனி­னும், குழந்­தை­க­ளைப் பள்­ளி­யில் சேர்க்­கும்­போது தெரிந்­து­வி­டும்.

"சாதி ஏற்­றத்­தாழ்­வு­கள்தான் இங்கே பகை­யின் பின்­னணி. அதை­யும் எனது படத்­தில் பதிவு செய்­தி­ருக்­கி­றேன். வெட்­டுக்­குத்து, கௌர­வக் குறைச்­சல் எல்­லாம் தாழ்த்­தப்­பட்ட இடத்­தில் திரு­ம­ணம் செய்­தால்­தான் நடக்­கிறது. இதை ஒழிக்க வேண்­டும் அல்­லவா. இது­கு­றித்­துப் பேசும் படம்­தான் 'தமிழ்க் குடி­ம­கன்'. நமது சமூ­கக் கட்­ட­மைப்­பின் அடித்­த­ளத்­தில் இருந்தே இது மாற வேண்­டும். அதற்­கான கதைக்­களத்­தில் இது­கு­றித்­துப் பேசி இருக்­கி­றேன்," என்­கி­றார் இசக்கி கார்­வண்­ணன்.

தனது கதை­யின் முக்­கி­ய­மான கதா­பாத்­தி­ரத்­துக்கு சமுத்­தி­ரக்­கனியை நடிக்க வைப்­ப­து­தான் இவ­ரது திட்­ட­மாக இருந்­துள்­ளது. ஆனால் சமுத்­தி­ரக்­க­னி­யால் உரிய காலத்­தில் கால்­ஷீட் ஒதுக்க முடி­ய­வில்­லை­யாம்.

"கொஞ்­சம் யோசித்­துப் பார்த்­த­தில், இயக்­கு­நர் சேரன் பொருத்­த­மாக இருப்­பார் எனத் தோன்­றி­யது. அவ­ரைப் போய்ப் பார்த்­தேன். சில திருத்­தங்­க­ளோடு இக்­க­தையை ஏற்­றுக்­கொண்­டார்.

"உணர்­வு­பூர்­வ­மான சினி­மா­வுக்­காக கள­மி­றங்­கும் அனைத்­து தகுதி­களும் சேரன் சாருக்கு உண்டு. ஆனால் அவரை நாம் சரி­யா­கப் பயன்­ப­டுத்­திக்கொள்­ள­வில்லை. மிக அரு­மை­யான நடிப்பை வெளிப்­ப­டுத்தி உள்­ளார்.

"ஒவ்­வொரு படம் இயக்­கும்­போதும் நடிக்­கும்­போ­தும் அது மக்­க­ளுக்­கான விஷ­ய­மாக இருக்க வேண்­டும் என நினைக்­கி­றார். அவரை நான் பல்­க­லைக்­க­ழ­கம் என்­று­தான் சொல்­வேன். அந்த அளவு அவர் அறிவாற்றல் உள்ளவர்," என்­கிறார் இயக்­கு­நர் இசக்கி கார்­வண்­ணன்.

விரைவில் திரைகாண உள்ள இப்படத்தை அனைத்து தரப்பினரும் பார்க்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.