'நந்தன்' படம் குறித்த பேச்சும் எதிர்பார்ப்புகளும் கோடம்பாக்கத்தில் அதிகரித்த வண்ணம் உள்ளன. காரணம், இந்தப் படத்துக்காக தனது தோற்றத்தை முற்றிலுமாக மாற்றிக்கொண்டுள்ளார் பட நாய
கன் சசிகுமார்.
ஏற்ற இறக்கமாகக் கட்டிய லுங்கி, ஒரு வார அழுக்குச் சட்டை, சீவாத தலைமுடி, பழைய ரப்பர் செருப்புடன் வலம் வரும் சசியை அவரது வீட்டாருக்கே அடையாளம் தெரியாது. அந்த அளவுக்கு கதாபாத்திரமாகவே மாறிவிட்டார்.
"இது நந்தன் என்ற தனி மனிதனின் கதை அல்ல. ஏராளமான நந்தன்களின் கதை. கலகலப்பும் துயரமும் கலந்துள்ள சாமானியர்களின் வாழ்க்கைப் பதிவு. அவர்களில் ஒருவன்தான் என் படத்தின் கதாநாயகன். அவனுக்குத் தெரிந்ததெல்லாம் விசுவாசமும் உண்மையும்தான்.
"ரகளையும் சிரிப்புமாகச் சென்று கொண்டிருக்கும் அவனது வாழ்க்கையில், திடீரென அரசியல் விளையாடத் தொடங்குகிறது. குட்டக்குட்டக் குனியும் நந்தனால் ஏதும் செய்ய முடியாத நிலை.
"இரண்டு முறை அடிவாங்கிவிட்டால், மூன்றாவது முறை எதிரியைப் பாய்ந்து அடிப்பவன் அல்ல இந்தக் கதாநாயகன். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், ஒரு கட்டத்தில் இந்தக் கதையில் நடிக்க ஏன்தான் ஒப்புக்கொண்டோமோ என்று நான் வருத்தப்பட்டிருக்கிறேன். இந்தக் கதை அவ்வளவு வலியானது, கொடுமையானது," என்கிறார் சசிகுமார்.
இயக்குநர் சரவணன் இந்தக் கதையை முதலில் சசிகுமாரிடம்தான் சொன்னாராம். முழுமையாகக் கேட்டு முடித்ததும் கதை நாயகனாக கருணாஸ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றேன். கருணாஸுக்கும் கதை பிடித்திருந்தது. ஆனால் கருணாஸ், சூரி என்று ஒரு சுற்று சுற்றிவிட்டு மீண்டும் என்னிடமே திரும்பி வந்தது இந்தக் கதை.
"இயக்குநர் சரவணன் எனது பதினைந்து ஆண்டுகால நண்பர். அதனால் அவர் கேட்டதும் மறுக்க முடியாமல் துணிந்து களமிறங்கிவிட்டேன். அதனால்தான் எனது தோற்றத்தில் இந்த தலைகீழ் மாற்றம்," என்று விளக்கம் அளிக்கிறார் சசிகுமாரர்.
கதை நாயகனாக தனக்கான கதாபாத்திரத்தை உள்வாங்கத்தான் மிகவும் சிரமப்பட்டாராம். முதல்நாள் படப்பிடிப்பின்போது, கதாநாயகன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் காட்சியைப் படமாக்கி உள்ளனர். அதில் மெனக்கெட்டு நடித்தபோது ஒட்டுமொத்த படக்குழுவும் கைதட்டி உற்சாகப்படுத்தியதாகச் சொல்கிறார்.
"இயக்குநர் சொன்ன கதையின் உயிர் என்னுள் மெல்ல மெல்லத்தான் இறங்கியது. அதை உணர்ந்ததும், படப்பிடிப்பை தொடர்ந்து நடத்துங்கள் என்றுகூறிவிட்டு, சுமார் ஒருவார காலம் ஒதுங்கிவிட்டேன். அந்தச் சமயத்தில் அமைதியாக யோசித்து, சிலவற்றை முடிவு செய்து, அதன்பிறகுதான் படப்பிடிப்பில் பங்கேற்றேன்," என்கிறார் சசி.
கூலிகளாக காலங்காலமாக அல்லாடும் ஒரு கூட்டத்தின் கதை இது. ஏச்சுப் பேச்சுகள், அவமானங்கள், இழப்புகள் என எதுவும் அவர்களிடம் எந்தவித சலனத்தையும் ஏற்படுத்தாது.
"அவர்களைப் பற்றி விரிவாக பதிவு செய்துள்ளேன். இது அனை வரும் தெரிந்துகொள்ள வேண்டும்," என்கிறார் இயக்குநர் சரவணன்.

