"விமர்சனங்களைப் பொருட்படுத்தாதவரை நாம் வலிமையாகவும் அன்பாகவும் இருப்போம்," என்றார் இளம் நாயகி திவ்யபாரதி.
சமூக ஊடகங்களில் ஏராளமானோர் தம்மை உருவக்கேலி செய்வது தொடக்கத்தில் வருத்தம் அளித்ததாகச் சொல்பவர், ரசிப்பவர்கள், வெறுப்பவர்கள் என எப்போதுமே இரு தரப்பினர் இருப்பர் என்கிறார்.
"நானும் நிறைய உருவக்கேலிகளை எதிர்கொண்டு வருகிறேன். எனது உடல் தோற்றத்தை மேம்படுத்த அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக சிலர் கூறுகின்றனர். ஒருசிலர் நான் எலும்புக்கூடுபோல் இருப்பதாக கருத்து தெரிவித்தனர். கல்லூரி நாள்களிலேயே பலவிதமான உருவக் கேலிகளை எதிர்கொண்டுள்ளேன்.
"தொடக்கத்தில் இந்தக் கேலிகள் என்னை மிகவும் பாதித்தன. எனது உடலை வெறுக்கும்படியும் செய்தன. மக்கள் முன்பு செல்ல பயமாக இருந்தது.
எனினும் விளம்பரத் துறையில் நுழைந்து எனது படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட தொடங்கியதும் பலரும் என்னைப் பாராட்டினர். இது எனக்கு துணிச்சலைக் கொடுத்தது," என்கிறார் திவ்யபாரதி.
ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக 'பேச்சிலர்' படத்தில் நடித்து பிரபலமானவர் திவ்ய பாரதி. 'மதில் மேல் காதல்', 'ஆசை' ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

