இந்திப் படம் ஒன்றில் சீதை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம் சாய் பல்லவி. அவர் நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு கேரளாவில் வசதி குறைந்தவர்களுக்காக மருத்துவமனை கட்டப் போவதாகவும், மருத்துவம் மூலம் சேவையாற்றப் போவதாகவும் அண்மையில் ஒரு தகவல் வெளியானது. இந்நிலையில், மருத்துவமனை கட்டுமானப் பணி முடிவதற்கு முன்பாக தாம் ஏற்கெனவே ஒப்புக்கொண்ட படங்களில் நடித்து முடிக்கத் திட்டமிட்டுள்ளா ராம் சாய் பல்லவி. அந்த வகையில் இந்திப் படம் ஒன்றில் அவர் நடிக்க உள்ளதாகத் தகவல். தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் ராமாயண இதிகாசத்தை இந்தியில் திரைப்படமாக்கு கிறார். அதில் ராமராக ரன்பீர் கபூரும் ராவணனாக ஹிருத்திக் ரோஷனும் நடிக்க சீதையாக சாய் பல்லவி ஒப்பந்தமாகி உள்ளதாகத் தகவல். முன்னதாக சீதை வேடத்தில் நடிக்க தீபிகா படுகோனிடம் பேச்சுவார்த்தை நடந்ததாம். எனினும் அவர் நடிக்கவில்லை.
விஜய்யின் 67ஆவது படத்தில் பிரியா ஆனந்த் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்தில் திரிஷா நாயகியாக நடிக்கிறார். படத்தின் பூசை அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இதில் விஜய், திரிஷா, அர்ஜுன் உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் இவர்களுடன் பிரியா ஆனந்தும் பங்கேற்றுள்ளார். அவர் எத்தகைய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார் என்பது தெரியவில்லை. தற்போது அந்தகன், சுமோ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் பிரியா ஆனந்த்.
திருமணம் முடிந்த கையோடு மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்க முடிவு செய்துள்ளாராம் ஹன்சிகா. அவர் தேனிலவு கொண்டாட வெளிநாட்டுக்குச் செல்ல இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் அதை ஒத்தி வைத்துள்ளாராம். தற்போது ஆர்.கண்ணன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் ஹன்சிகா. அதில் அவருக்கு இரட்டை வேடங்களாம். இதன் படப்பிடிப்பில் அவசரமாக பங்கேற்க வேண்டியுள்ளதாகத் தகவல். எனவே படப்பிடிப்பை முடித்த பிறகே தேனிலவு கொண்டாட்டமாம்.
நடிகை சாய் தன்ஷிகாவுக்கு தமிழைவிட இப்போது தெலுங்கில்தான் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க அதிக வாய்ப்புகள் தேடி வருகின்றனவாம். அந்த வகையில் 'தக்ஷீனா' என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். ஓஷோ துளசிராம் இயக்கும் இந்தப் படம் முழு நீள திகிலும் மர்மங்களும் நிறைந்த படமாக உருவாகி வருகிறது. "இயக்குநரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் அதிக கவனம் செலுத்துகிறார் தன்ஷிகா. கடினமான, உணர்வுபூர்வமான, சவாலான காட்சிகளை அவரை நம்பி ஒப்படைக்கலாம். ஆபத்து நிறைந்த காட்சிகளைக் கண்டும் அசரமாட்டார். எனது கதைக்கு அவர் நூறு விழுக்காடு பொருத்தமான நாயகியாக அமைந்தது எனது நல்ல நேரம் என்பேன்," என்கிறார் இயக்குநர்.
ஒரே ஆண்டில் ஒன்பது படங்களில் நடித்திருப்பது உற்சாகம் அளிப்பதாகச் சொல்கிறார் இளம் நாயகி ஐஸ்வர்யா லட்சுமி. நடப்பாண்டில் மலையாளம், தெலுங்கு மொழிகளில் தலா இரண்டு படங்களிலும் தமிழில் ஐந்து படங்களிலும் நடித்துள்ளார். அனைத்தும் அடுத்தடுத்து வெளியாவதைப் பார்க்கும்போது தமக்கே வியப்பாக உள்ளது என்கிறார் ஐஸ்வர்யா. இதையடுத்து, கதை கேட்பதில் கூடுதல் கவனம் செலுத்துவதாகவும் இப்போது கிடைத்துள்ள நற்பெயரை தக்க வைப்பதற்கு முன்னுரிமை அளிப்பதாகவும் சொல்கிறார்.

