நடிகர் ரஜினிகாந்த் தினமும் காலையில் தனது போயஸ் கார்டன் வீட்டின் முன் நிற்கும் ரசிகர்களைப் பார்த்து கையசப்பது வழக்கம். அவருடைய வருகைக்காக பலரும் தினமும் அவர் வீட்டுவாசலில் காத்திருப்பார்கள். நேற்று காலை ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் ரஜினிகாந்த் வீட்டின் முன் அதிகாலையிலேயே ஒன்றுகூடத் தொடங்கினர்.
ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. லதா ரஜினிகாந்த் வீட்டிலிருந்து வெளியே வந்து, "ரஜினிகாந்த் ஊரில் இல்லை. அவர் சார்பாக நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்," என்று கூறினார். அதைக் கேட்ட ரசிகர்கள் 'தலைவனைச் சந்திக்க முடியாமல் போனதே' என்று கண்ணீருடன் திரும்பினர்.
ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், "என் இனிய நண்பர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்," என்று பதிவிட்டு உள்ளார்.
ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர்' படத்தின் படக்குழு ரஜினிக்கு பிறந்தநாள் பரிசாக புதிய சுவரொட்டி ஒன்றை வெளியிட்டுள்ளது.

