ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதத்தில் அதிகமான படங்கள் வெளிவருவது வழக்கம். அந்த விதத்தில் இம்மாதம் 9ஆம் தேதி, மறுபதிப்பு படங்களைச் சேர்த்து, 'DR 56', 'எஸ்டேட்', 'ஈவில்', 'குருமூர்த்தி', 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்', 'ஸ்ரீ ராஜ ராஜ மணிகண்டன்', 'வரலாறு முக்கியம்', 'விஜயானந்த்', என 8 படங்கள் வெளியாயின. படங்கள் வெளியான தினத்தில் 'மாண்டஸ்' புயலின் தாக்கம் காரணமாக பல மாவட்டங்களில் தொடர் மழை பெய்ததால் திரையரங்குகள் வெறிச்சோடிக் கிடந்தன. அதனால் படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர்களும் படக்குழுவினர்களும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
முத்தையா இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிக்கும் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெற்றது. நேற்று முன்தினம் ஆர்யாவின் பிறந்தநாள் என்பதால் படக்குழுவினர் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினர். அத்துடன் படக்குழு சார்பில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2014ஆம் ஆண்டு மதுரையைக் களமாக கொண்டு உருவாகிய படம் 'ஜிகர்தண்டா'. சித்தார்த் கதாநாயகனாக நடித்த அந்தப் படத்தில் லட்சுமி மேனன் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்திருந்தார். அந்தப் படத்தில் அவருடைய நடிப்புக்காக 2014ஆம் ஆண்டின் தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு 'ஜிகர்தண்டா' படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கவுள்ளதாக கார்த்திக் சுப்பராஜ் அறிவித்திருந்தார். இந்நிலையில் 'ஜிகர்தண்டா 2' படத்தின் முன்னோட்டக் காட்சியை படக்குழு வெளியிட்டது. இதில் எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துணிவு'. நேற்று முன்தினம் 'துணிவு' படத்தின் முதல் பாடலான 'சில்லா சில்லா' பாடலின் வரிகளைக் காணொளியாக படக்குழு வெளியிட்டது. இந்நிலையில் 'சில்லா சில்லா' பாடல் வெளியான 24 மணி நேரத்தில் அதிகம் பார்க்கப்பட்ட காணொளி என்ற சாதனையை படைத்துள்ளது. இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தனுஷ் தனது மாமானாரின் பிறந்தநாளை முன்னிட்டு முதன் முதலாக தனது டுவிட்டர் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு "பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவா' என்று பதிவிட்டு, தனக்கு மிகவும் பிடித்த விஷயம் இளையராஜாவின் இசை. இளையராஜா என் கடவுள். அவரை நான் மிகவும் நேசிக்கிறேன். அவர்தான் எனக்கு அம்மா, தாலாட்டு, எல்லாமே. ரஜினி என்னுடைய தலைவர்," என்று குறிப்பிட்டுள்ளார்.

