திரைத் துளிகள்

திரைத் துளிகள்

2 mins read
846cede3-c07a-4d49-acd2-fd1dbf65a509
-
multi-img1 of 3

 விக்ரம் நடித்துள்ள 'கோப்ரா' திரைப்படம் ரஷ்ய மொழியில் வெளியாகிறது. இது உற்சாகம் அளிப்பதாகச் சொல்கிறார் விக்ரம். 'கோப்ரா' படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியீடு கண்டு கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதையடுத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் 'தங்கலான்' படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். இந்நிலையில், இந்திய மொழிகளில் வெளியாகும் படங்களுக்கு ரஷ்யாவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றன. எனவே 'கோப்ரா' படத்தையும் அங்கு வெளியிட முடிவு செய்த தயாரிப்புத் தரப்பு, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. அநேகமாக அடுத்த மாதம் 'கோப்ரா' படம் ரஷ்ய மொழியில் வெளியாகக்கூடும்.

 மதுப்பழக்கத்தால் தமது வாழ்க்கை மோசமாகப் பாதிக்கப்பட்டது என்கிறார் மனீஷா கொய்ராலா. எனவே இளையவர்கள் அப்பழக்கத்தைக் கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார். "நடிகையாக அறிமுகமான புதிதில், கேமரா முன் நிற்பதற்கு தயங்கினேன். அந்தப் பயத்தைப் போக்கிக்கொள்ள மதுவின் துணையை நாடினேன். ஆனால் நாளடைவில் மதுப்பழக்கத்துக்கு அடிமையானதால், அதன் துணையின்றி தூங்கவே முடியாத நிலை ஏற்பட்டது. அதன் பிறகுதான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்தேன். புற்றுநோய் எனக்குப் பலவிதமான வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுத் தந்தது," என்கிறார் மனீஷா கொய்ராலா.

 நடிகை என்பதால் சொந்த வாழ்க்கையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்கிறார் டாப்சி. கேமராவுடன் செய்தி யாளர்கள் பின்தொடர்வதை தாம் விரும்பவில்லை என்றும் தம்மை மிருகக் காட்சி சாலையில் உள்ள விலங்குகளைப் போல் நடத்துவது பிடிக்கவில்லை என்றும் அண்மைய பேட்டியில் தெரிவித்துள் ளார். "பாதுகாவலர்கள் துணையின்றி சாலைகளில் நடக்க விரும்புகிறேன். எனினும், எதிர்காலத்தில் எனது பாதுகாவலர்களால் உங்களுக்கு அதிர்ச்சி ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் என்னை மரியாதையுடன் நடத்துங்கள். "நடிகையாக இருப்பதால் சில மோசமான விஷயங்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. என்னை விலங்குகளைப் போல் பார்ப்பது சரிதானா?" என்று ஆவேசத்துடன் கேள்வி எழுப்பி உள்ளார் டாப்சி.

 ராஜ் மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் புதுப் படம் 'பாபா பிளாக் ஷீப்'. இதை அடுத்த ஆண்டு வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். நல்ல கருத்துகளைச் சொல்லும் பேச்சாளராக பெயரெடுத்துள்ளவர் ராஜ் மோகன்.

இப்போது திரையுலகில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் இயக்கும் இப்படத்தில் ஆர்.ஜே. விக்னேஷ்காந்த், அயாஸ், நரேந்திர பிரசாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.