அஞ்சலி அறிமுகமாகி 16 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுநாள் வரை திரையுலகில் தொடர்ந்து பணியாற்றி வருவதையே தாம் பெரிய சாதனையாகக் கருதுவதாகச் சொல்கிறார்.
இன்று திரையுலகில் தமக்கு கிடைத்துள்ள இடம் மனநிறைவை அளித்துள்ளதாகக் குறிப்பிடுபவர், பெரிய இலக்குகள் ஏதும் தமக்கு இல்லை என்கிறார்.
அண்மைக்காலமாக இணையத் தொடர்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் தேடி வருகின்றனவாம். அஞ்சலி நடிப்பில் வெளியான இரு தொடர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
"கடந்த ஆண்டு 'நவரசா', 'பாவ கதைகள்' ஆகிய இரு தொடர்களில் நடித்திருந்தேன். அதன் பிறகு 'ஜான்சி', 'ஃபால்' ஆகிய இரு தொடர்களில் ஒப்பந்தமானேன்.
"ஒரு தொடரில் எனது நினைவாற்றலை இழந்த நிலையில், பல கேள்விகளுக்கு விடை தேடி அலையும் பெண்ணின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். அதிகம் பேசாத அமைதியான பெண் என்றாலும் மனதளவில் துணிச்சல் மிக்கவளாக கச்சிதமாக நடித்த வகையில் பாராட்டுகள் குவிந்தன.
"'ஜான்சி' தொடரைப் பொறுத்தவரையில் சண்டைப் பயிற்சியும் பெற்றேன். இத்தகைய அனுபவங்கள் அலாதியானவை. அதேசமயம் நீண்டகாலம் ஒரே துறையில் பணியாற்றும்போது நமது கடந்தகால அனுபவங்களும் கைகொடுக்கும்," என்கிறார் அஞ்சலி.
ஒரு திரைப்படம் அல்லது இணையத் தொடரில் நடிக்க ஒப்புக்கொள்ளும் முன்பு அவற்றின் கதை மனதைக் கவரும் வகையில் உள்ளதா என்பதைத்தான் முதலில் கவனிப்பாராம். அதன்பிறகே தமக்கான கதாபாத்திரம் குறித்து கேட்டறிவதாகச் சொல்கிறார்.
"எனது கதாபாத்திரம் மூலம் புதிதாக ஏதேனும் முயற்சி செய்ய முடியுமா, வித்தியாசமாக நடிக்க வாய்ப்புள்ளதா என்பதையும் கவனிப்பேன். மேலும், ஒரு கதையின், கதாபாத்திரத்தின் ஆழம் குறித்து அலசும்போது பல விஷயங்கள் புரிபடும்.
"நான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள முயற்சி செய்வேன். கதையின் அடுத்தகட்ட நகர்வுகளுக்கு எனது கதாபாத்திரம் எந்த அளவு துணை நிற்கும் என்பதும் முக்கியம். ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கும் வகையிலான பாத்திரங்கள்தான் எனது விருப்பம்.
"இன்றுவரை அப்படிப்பட்ட வேடங்களுக்குத்தான் முன்னுரிமை அளிக்கிறேன். அது மட்டுமல்ல, ஒரு படத்துக்கான கதை, திரைக்கதையை அச்சிட்டு கேட்டு வாங்கிப் படிப்பதைவிட, இயக்குநரே அதை விவரிக்கும்போது கேட்பதுதான் எனக்குப் பிடிக்கும். ஓர் இயக்குநரால், தாம் எதிர்பார்க்கும் உணர்வுகளை அழகாக எடுத்துச் சொல்ல முடியும்," என்கிறார் அஞ்சலி.
'இயக்குநரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப கச்சிதமாக நடிக்கக்கூடிய நடிகை' என்று பெயர் வாங்குவதில்தான் தமக்கு விருப்பம் என்ற குறிப்பிடுபவர், இந்த இலக்கை எட்டுவதற்கு தாம் மேற்கொண்ட முயற்சிகளுக்குப் பலன் கிடைத்துள்ளதாகச் சொல்கிறார்.
'இயக்குநரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப கச்சிதமாக நடிக்கக்கூடிய நடிகை' என்று பெயர் வாங்குவதில்தான் தமக்கு விருப்பம் என்று குறிப்பிடுபவர், இந்த இலக்கை எட்டுவதற்கு தாம் மேற்கொண்ட முயற்சிகளுக்குப் பலன் கிடைத்துள்ளதாகச் சொல்கிறார்.
"திரையுலகில் அறிமுகமான வேளையில் நடித்த 'கற்றது தமிழ்' படத்தில் எனக்கு கனமான கதாபாத்திரமாக அமைந்தது. அச்சமயம் எப்போதுமே பதற்றமாக உணர்வேன்.
"அடுத்து 'அங்காடி தெரு' படத்தில் நடிப்பதற்குள் ஓரளவு அனுபவம் பெற்ற உணர்வு இருந்தது. அதனால் பதற்றமின்றி நடிக்க முடிந்தது.
"இப்போது ஒரு கதையை எவ்வாறு அணுக வேண்டும், திரையில் எப்படித் தோன்ற வேண்டும் என்பது குறித்தெல்லாம் தீர்மானிக்க அனுபவ அறிவு உள்ளது," என்று சொல்லும் அஞ்சலி, காதல், திருமணம் குறித்தெல்லாம் பேசுவதற்கு தமக்கு விருப்பமோ, நேரமோ இல்லை என்கிறார்.
திருமணம் நடக்கும் பட்சத்தில் அதுகுறித்த அறிவிப்பை வெளிப்படையாக வெளியிடுவதில் தமக்கு எந்தவிதமான தயக்கமும் இல்லை என்கிறார். நடிகர் ஜெய்யும் அஞ்சலியும் காதலிப்பதாக முன்பு ஒரு தகவல் வெளியானது. எனினும் அதை இருவரும் உறுதி செய்யவில்லை.
, :

