சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் முதன்முறையாக தயாரித்து, கதாநாயகனாக நடித்த திரைப்படம் 'தி லெஜண்ட்'. இப்படத்தின் மூலம் ஊர்வசி ரவுத்தலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார். நேற்று முன்தினம் 'பிரைடல் ஸ்டூடியோ' நூரின் திறப்பு விழா கோவையில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் கலந்துகொண்ட சரவணன், "கடுமையாக உழைப்பவர்களை எனக்கு எப்போதும் பிடிக்கும். அப்பேற்பட்ட ஒருவர்தான் 'ஸ்டூடியோ' நூரின் நிறுவனர் நூர் முகமது. அவர் மிகவும் அன்பான மனிதர். அவரது அன்பிற்கு கட்டுப்பட்டுத்தான் இங்கு வந்தேன். நடிகர் நடிகைகளை மிகவும் அழகாக திரையில் காட்டுவதில் ஒப்பனை கலைஞர்களுக்கு மிகப்பெரிய பங்குண்டு. அந்தக் கலைஞர்களில் ஒருவர் நூர் முகமது. இவர் மிகவும் திறமையான கலைஞர். மக்களும், மகேசனும் நினைத்தால் நிச்சயம் நான் அரசியலுக்கு வருவேன்," என்று பேசியது கோவையில்
பரபரப்பை ஏற்படுத்தியது.
நடிகர் அஜித், நடிகர் விஜய் நடிப்பில் திரைப்படங்கள் பொங்கலுக்கு வெளியாக உள்ளன. இதுகுறித்து அஜித்தின் 'துணிவு' படத்தை வெளியிடும் 'ரெட் ஜெயன்ட் மூவிஸ்' நிறுவனர் உதயநிதி ஸ்டாலின் "பொங்கலுக்கு 'துணிவு', 'வாரிசு' திரைப்படங்கள் சரிசமமான அளவில் திரையரங்குகளில் வெளியாகும்," என்று அறிவித்திருந்தார். ஆனால், இறுதி நிலவரம் குறித்து உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விஜய் திரைப்படத்தைவிட அதிக திரையரங்குகளில் அஜித்தின் திரைப்படம் வெளியாகவுள்ளது. கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 'துணிவு' திரையிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் 'கோல்டன் குளோப்' விருது பட்டியலில் இரண்டு பிரிவுகளில் இடம்பிடித்துள்ளது. திரைத்துறையினர் உயரிய விருதாக கருதும், 'ஆஸ்கர்' விருதுக்கு அடுத்தபடியாக 'கோல்டன் குளோப்' விருது விளங்கி வருகிறது. இந்த விழா 2023ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது. உலக அளவில் தென்னிந்திய படம் நியமனம் ஆகி இருப்பது தென்னிந்தியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

