நடிகர் கமல்ஹாசனின் அர்ப்பணிப்பையும் உழைப்பையும் நேரில் கண்டபோது வியப்பாக இருந்ததாகச் சொல்கிறார் ரகுல் பிரீத் சிங். 'இந்தியன்-2' படத்தில் நாயகியாக நடித்து வரும் ரகுல், கமலைவிட சிறந்த கலைஞரை தாம் இன்னும் சந்திக்கவில்லை என்கிறார்.
"இந்தப் படத்தில் 90 வயது முதியவராக நடிக்கிறார் கமல். இதற்கான ஒப்பனையைப் போட்டுக்கொள்ள அவருக்கு ஐந்து மணி நேரம் தேவைப்படும். அதனால் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் படப்பிடிப்புத் தளத்துக்கு வந்துவிடுவார்.
"அதன் பிறகு முழுமையாக ஒப்பனை போட்டுக்கொண்டு கேமரா முன் வந்து நிற்க காலை பத்து மணியாகிவிடும். அதேபோல் ஒப்பனையைக் கலைப்பதற்கு இரண்டு மணி நேரம் தேவைப்படும்.
"வானிலை வெப்பமாக இருக்கும்போது இதுபோன்ற ஒப்பனையை தாங்கிக்கொண்டு நடிப்பது மிகவும் கடினம். ஆனால் கமல் எதற்காகவும் அலுத்துக் கொள்ளாமல் நடிக்கிறார். தமது வாழ்நாளில் 75 விழுக்காட்டை சினிமாவுக்காகவே ஒதுக்கிவிட்ட அந்தக் கலைஞருடன் இணைந்து நடிப்பதைவிட அருமையான அனுபவம் இருக்கமுடியாது. அதேபோல் சினிமா குறித்து அவரைவிட வேறு யாருக்கும் அதிகம் தெரிந்திருக்காது," எனப் பாராட்டுகிறார் ரகுல்.

