நடிகர், தயாரிப்பாளர் என வலம் வரும் சிவகார்த்திகேயன் அடுத்து இயக்குநர் அவதாரம் எடுக்கப் போகிறார்.
தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் வாழ்க்கை திரைப்பட மாகிறது. அதில் நடராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்து அவரே இயக்கவும் போகிறாராம்.
இது குறித்து கிரிக்கெட் வீரர் நடராஜனே தமது பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
"எனது வாழ்க்கை கதை திரைப்படமாகிறது. எனது கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பார். அதுமட்டுமன்றி, அந்த படத்தை அவரே இயக்கவும் முடிவு செய்துள்ளார்," என்று நடராஜன் கூறியுள்ளார். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து ஏற்கெனவே 'கனா' என்ற படத்தை தயாரித்துள்ளார் சிவகார்த்திகேயன். அதில் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாகவும் சிவகார்த்திகேயன் கிரிக்கெட் பயிற்சியாளராகவும் நடித்திருந்தனர்.
புதுப் படம் ஒன்றில் தம்மைவிட சுமார் பத்து வயது குறைவான நடிகருடன் இணைந்து நடிக்கிறார் மாளவிகா மோகனன். அறிமுக இயக்கு நர் ஆல்வின் ஹென்றி இயக்கும் இப்படத்தில் இருபது வயதான மேத்யூ தாமஸ் நாயகனாக நடிக்கிறார். "பிரபல எழுத்தாளர்கள் பென்யமின், ஜிஆர் இந்து கோபன் ஆகிய எழுத்தாளர்கள் இருவரும் இணைந்து கதையை எழுதியுள்ளனர். இந்தக் காரணத்தால்தான் மாளவிகா இப்படத்தில் நடிக்க சம்மதித்தார். உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி இந்த படத்தின் திரைக்கதை உருவாக்கப் பட்டுள்ளது. அதேசமயம் காதல் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் காட்சிகளும் நிறைந்துள்ளன. திருவனந்தபுரம் மாவட்டத்திலுள்ள பூவார், மாலத்தீவுகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது," என்கிறார் இயக்குநர்.
தமக்கு எதிராக சமூக ஊடகங்களில் சில தரப்பினர் அவதூறான தகவல்களைப் பரப்பி வருவதாகச் சொல் கிறார் பாவனா. நவீன தொழில்நுட்பங்கள் மூலம் பிறரை மிரட்டுவது, களங்கம் ஏற்படுத்துவது சிலரின் வேலையாகிவிட்டது என்றும் பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"பணம் கொடுத்து, சிலரைப் பணியமர்த்தியும் இதைச் செய்ய வைக்கிறார்கள். இது பலகாலமாக நீடித்து வருகிறது. என் முதுகுக்குப் பின்னால் பேசியவர்களை நான் மறக்க மாட்டேன். அவர்களைப் பற்றி பேசவும் விரும்பவில்லை. மலையாள திரையுலகில் மீண்டும் நடிக்க வரமாட்டேன் என்று நினைத்தேன். அப்படி வந்தால் மன அமைதி போய்விடும் என்றும் நினைத்தேன். ஆனால் என் நண்பர்கள் மீண்டும் நடிக்க வைத்துள்ளனர்," என்கிறார் பாவனா.
உலகப் போருக்குப் பிறகு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை விவரிக்கும் படமாக உருவாகி உள்ளது 'கலியுகம்'. இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதை நாயகியாகவும் கிஷோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
"போரின் பின்விளைவுகள், அதன் காரணமாக பல நாடுகள் சந்திக்கவிருக்கும் இழப்புகள் ஆகியவற்றுடன் பல சமகால நெருக்கடிகள் குறித்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதற்கேற்ப திரைக்கதையில் சுவாரசியமான அம்சங்களை இணைத்துள்ளோம்," என்கிறார் இயக்குநர் பிரமோத் சுந்தர்.
படத்தின் படப்பிடிப்புப் பணிகள் நிறைவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இப்படத்தின் முதல்தோற்றச் சுவரொட்டி வெளியாகியுள்ளது.

