"வெவ்வேறு கதைக்களங்களில் பணியாற்ற வேண்டும் என்பதே சினிமாவை நேசிக்கும் அனைத்து கலைஞர்களின் விருப்பமாக இருக்கும். நானும் அதற்கு விதிவிலக்கல்ல," என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
நயன்தாராவைப் போல் இவரும் தனி நாயகியாக நடிக்கத் தொடங்கி நீண்ட நாள்களாகிவிட்டன. ஐஸ்வர்யாவுக்கும் நல்ல கதாபாத்திரங்கள் அமைந்து வருகின்றன.
அந்தப் பட்டியலில் இணைந்திருக்கிறது 'ஃபர்ஹானா'. மிக விரைவில் திரைகாண உள்ளது. இத்திரைப்படத்தை இயக்கியிருப்பவர் நெல்சன் வெங்கடேசன்.
'ஒருநாள் கூத்து', 'மான்ஸ்டர்' என தரமான படைப்புகளைத் தந்த இயக்குநர், மூன்றாவது படத்திலும் சுவாரசியமான அம்சங்களைப் புகுத்தி ரசிகர்களைக் கவர வேண்டும் எனும் உறுதியுடன் களமிறங்கி உழைத்துள்ளார்.
சரி... 'ஃபர்ஹானா' என்ன மாதிரியான படம்? என்ற கேள்விக்கு அதிகம் யோசிக்காமல் சுருக்கமான விளக்கத்துடன் பதில் வருகிறது.
"திரையுலகம் மாறிவிட்டது. முன்பெல்லாம் கதாநாயகன் என்றால் ரொம்ப நல்லவனாக இருக்கவேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. இப்போது அத்தகைய கட்டாயம் இல்லை.
"வில்லன்களிடம் உள்ள நல்ல குணங்களையும் கவனிக்கும் அளவுக்கு ரசிகர்கள் வந்துவிட்டனர். திரைப்படங்களில் இஸ்லாமியர்கள் நல்லவர்களாக அரிதாகவே சித்திரிக்கப்படுகிறார்கள்.
"இந்த நிலை நீடிக்க வேண்டுமா, வேறு கதைகள் இல்லையா, நான் பழகிய மனிதர்கள் வேறுவிதமாக மென்மையானவர்களாக உள்ளனரே என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன. இவற்றை எல்லாம் மனதிற்கொண்டுதான் 'ஃபர்ஹானா' கதையை எழுதியுள்ளேன்," என்று அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் நெல்சன் வெங்கடேசன்.
கதைப்படி, நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் மூன்று பிள்ளைகளுக்குத் தாயாக நடித்துள்ளாராம். ஏற்கெனவே தாயாக நடித்துள்ள தமக்கு இது இன்னொரு சவால் என்கிறாராம் ஐஸ்வர்யா.
அவரது குடும்பம் காலணிகள் விற்கும் கடையை நடத்தி வருகிறது.
ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த கடை. கால ஓட்டத்தில் வியாபாரம் குறைந்துகொண்டே போக, குடும்பத்தைக் காப்பாற்ற வேறு வேலை வாய்ப்புகளைத் தேட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
'ஃபர்ஹானா'வின் இந்தப் பயணம்தான் படம். நிச்சயம் புதுக்களமும் புதுக் கதையுமாக இருக்கும் என்பதால் ரசிகர்கள் வரவேற்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்கிறார் நெல்சன்.
சில முன்னணி நடிகைகளிடம் இந்தக் கதையை விவரித்தாராம். ஆனால் மூன்று குழந்தைகளின் தாய் என்றதும் பதறிப் போனார்களாம். அதன் பிறகு ஐஸ்வர்யாவின் நினைவு வந்திருக்கிறது.
"ஐஸ்வர்யா இப்போது நல்ல இடத்தில் இருக்கிறார். நல்ல கதாபாத்திரங்களைத் தேடி அலைகிறார். திறமையை மட்டுமே நம்பி திரையுலகில் தனக்கான இடத்தைப் பிடித்திருக்கிறார். இந்தப் படத்தில் அவரது திறமையை வெளிச்சம் போட்டுக் காட்ட பல்வேறு தருணங்கள் உள்ளன. கொந்தளிக்கும் முகபாவம், தனித்தன்மை வாய்ந்த குரல் என ஒவ்வொரு காட்சியிலும் வித்தியாசம் காட்டி உள்ளார். அந்தக் காட்சிகளை எல்லாம் உடன் நடித்தவர்களையும் ஓரங்கட்டி தன்வயப்படுத்தி இருக்கிறார்.
"இஸ்லாமியர் உலகத்தின் நுணுக்கமான புள்ளிகளை அவரிடம் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறேன். அவரின் மொத்த நடிப்பிலும் இஸ்லாமியப் பெண்களின் முழு வடிவம் கிடைக்கும்," என்கிறார் நெல்சன்.
தமிழ் சினிமா ரசிகர்களை இஸ்லாமிய மக்களின் உலகத்திற்கு கொண்டு செல்லவேண்டும் என்பதே தனது விருப்பம் என்று குறிப்பிடுபவர், அதற்கேற்ப கதைக்களத்தை அமைத்துள்ளதாகச் சொல்கிறார்.
"ஒருமுறை இயக்குநர் மாரி செல்வராஜிடம், ஏன் இஸ்லாமியர் குறித்து படம் இயக்கவில்லை என்று கேள்வி கேட்டனர். அதற்கு அவர், 'இஸ்லாமியரின் வாழ்க்கை முறை குறித்து எனக்கு அதிகம் தெரியாது. அதை அருகில் இருந்து கவனிக்கும் வாய்ப்பும் அமையவில்லை' என்று பதில் அளித்திருந்தார்.
"எனக்கு அந்தக் கதவைத் திறந்து பார்க்க வேண்டும் என்று தோன்றியது. மலையாளப் படங்களில் பல்வேறு இஸ்லாமிய கதாபாத்திரங்களும் அவர்களின் வாழ்க்கை நெறிமுறைகளும் இடம்பெறுகிறது.
"அங்கு நிறைய இஸ்லாமிய இயக்குநர்கள் சர்வ சாதாரணமாக தங்களின் வாழ்க்கையைச் சொல்கிறார்கள். தமிழிலும் அதுபோன்ற படைப்புகள் அதிக எண்ணிக்கையில் வெளிவரும்போது, ரசிகர்களிடம் நல்ல புரிதல் வரும்," என்கிறார் நெல்சன்.
படம் மிக விரைவில் வெளியீடு காண உள்ளது. இந்தப் படம் ஐஸ்வர்யாவின் திரைப்பயணத்தில் நல்ல திருப்புமுனையாக அமையும் என்கிறது இயக்குநர் தரப்பு.
, :

