அஜித்தின் 'துணிவு', விஜய்யின் 'வாரிசு' ஆகிய இரு படங்களின் வெளியீட்டையொட்டி இருவரது ரசிகர்களுக்கும் இடையே மறைமுக மோதல்கள் வெடித்துக்கொண்டிருக்கின்றன.
குறிப்பாக, சமூக ஊடகங்களில் இரு நாயகர்களில் யாருக்கு தமிழ் சினிமாவில் முதலிடம் என்பதில் பெரும் போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில் இரு படங்களிலும் இடம்பெறும் பாடல் வெளியாகி, சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன. இப்போது, எந்தப் படம் தமிழகத்திலும் வெளிநாடுகளிலும் அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் வெளியாகும் என்பதில் போட்டி நிலவுகிறது.
அஜித்தின் துணிவு படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 600க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியீடு காண இருப்பதாக அவரது தரப்பு அண்மையில் ஒரு தகவலைப் பரவவிட்டது. மேலும், வெளிநாடுகளில் அஜித் படத்துக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு கிடைக்கும் என்றும் அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
அத்துடன், பொங்கலையொட்டி அடுத்த ஆண்டு ஜனவரி 11ஆம் தேதியே துணிவு வெளியீடு காண உள்ளதாகவும் ஒரு தகவல் வெளியானது.
இந்நிலையில், வாரிசு படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜு, தமிழ்த் திரையுலகில் முதல் நிலை நடிகர் விஜய்தான் என்றும் அவருக்கு அடுத்த இடத்தில்தான் அஜித் உள்ளார் என்றும் கூறியது புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
அண்மைய பேட்டி ஒன்றில், இரு படங்களுக்கும் 400 திரையரங்குகளை ஒதுக்குவதாகச் சொல்லப்படுவதை ஏற்க இயலாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
"தமிழகத்தில் கதாநாயகர்களுக்கான பட்டியலில் விஜய்தான் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில்தான் அஜித் உள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். எனவே துணிவு படத்தை வெளியிட உள்ள ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து 'வாரிசு' படத்துக்கு அதிக திரையரங்குகளை ஒதுக்குமாறு கேட்டுக் கொள்வேன்," என்கிறார் தில் ராஜு.

