'எந்தவித வருத்தமும் இல்லை'

'எந்தவித வருத்தமும் இல்லை'

3 mins read

வெற்றி, தோல்­வி­கள் குறித்து தாம் அதி­கம் அலட்டிக்கொள்­வ­தில்லை என்­கி­றார் சந்­தா­னம்.

கடந்த கால் நூற்­றாண்­டுக்­கும் மேலாகத் தமிழ்த் திரை­யு­ல­கில் நீடித்து வரும் அவர், தற்­போது 'கிக்' என்ற படத்­தில் நடித்து முடித்துள்ளார்.

நகைச்­சுவை நடி­க­ராக இருந்து கதாநாயகனாக மாறி­யி­ருப்­பதை வளர்ச்­சி­யா­கத்­தான் பார்க்கி­றாராம். ஒரு­போ­தும் இந்த முடி­வுக்­காக தாம் வருத்­தப்­பட்­ட­தில்லை என்­றும் கூறு­கி­றார்.

"நான் இப்­போது அதிக படங்­களில் நடிக்­க­வில்லை என ரசி­கர்­கள் வருத்­தப்­ப­டு­கின்­ற­னர். நகைச்­சுவை நடி­க­ராக இருந்­த­போது எண்­ணிக்கை அள­வில் அதிக படங்­களில் நடிக்க முடி­யும். கதா­நா­ய­கன் என்­கி­ற­போது நமக்­கான பொறுப்­பு­கள் அதி­க­ரிக்­கின்­றன. அத­னால் ஆண்­டுக்கு இரண்டு, மூன்று படங்­களில் நடிப்­பதே பெரிய விஷ­யம். ரசிகர்­களுக்­கும் இது தெரி­யும். எனி­னும், என் மீதுள்ள அன்­பின் கார­ண­மாக இவ்­வாறு கூறு­கின்­ற­னர்," என்­கி­றார் சந்தானம்.

கதா­நா­ய­க­னாக உயர்ந்த பிறகு மாறு­பட்ட கதா­பாத்­தி­ரங்­களில் நடிக்க முடி­கிறது என்று குறிப்­பிடு­பவர், இப்­போ­து­தான் தனது திறமையை முழு­மை­யாக வெளிப்­படுத்த முடி­கிறது என்­கி­றார்.

"நகைச்­சு­வை­யைக் கைவிட்டு நாய­க­னாக உரு­வெ­டுத்­த­தில் எனக்கு எந்­த­வி­த­மான வருத்­த­மும் இல்லை. நகைச்­சு­வைக்­கா­கப் பேசப்­படும் சார்லி சாப்­ளின், என்.எஸ்.கிருஷ்­ணன் போன்ற ஆளு­மை­கள் ஒரு கால­கட்­டத்­தில் கதா­நா­ய­கனாக நடித்­துள்­ள­னர். எனி­னும் அவர்களில் பல­ரால் அதே முடி­வில் நீடிக்க இயல­வில்லை. நான் தாக்­குப்­பி­டிக்கி­றேன், அவ்­வ­ள­வு­தான்.

தற்­போது 'கிக்' படத்­தில் நடித்து முடித்­துள்ள சந்­தா­னம், அடுத்து ஒரு திகில் படத்­தில் நடிக்க உள்­ளா­ராம். மேலும், ஒரு முழு­நீள நகைச்­சு­வைப் படத்­தி­லும் ஒப்­பந்­த­மாகி உள்ளார்.

"பள்­ளி­யில் ஒரு வகுப்­பில் இருந்து அடுத்த வகுப்­புக்கு மாறு­வது போன்று நான் நாய­க­னாக மாறி­யதை வளர்ச்சி­யா­கத்­ தான் பார்க்­கி­றேன். எப்­போ­துமே கல­க­லப்­பாக இருப்­ப­தா­க­வும் திரை யில் தோன்றி அனை­வ­ரை­யும் சிரிக்க வைப்­ப­தா­க­வும் சொல்­கிறார்­கள். எனக்கு மட்­டுமே எப்­படி இதற்­கெல்லாம் சக்தி கிடைக்­கிறது என்றும் கேட்­கி­றார்­கள். எதைப் பற்­றி­யும் கவ­லைப்­ப­டா­மல் இருப்­ப­து­தான் என்­னி­டம் உள்ள சக்தி. நாம் அன்­றாட வாழ்­வில் சந்­திக்­கும் ஒவ்­வொரு மனி­த­ரை­யும் நம் மன­துக்கு நெருக்­க­மா­ன­வர் என்ற கண்­ணோட்­டத்­தில் பார்க்க வேண்­டும். அதைச் செய்­தால் எல்­லோ­ரு­ட­னும் மகிழ்ச்­சி­யாக இருக்க முடி­யும்.

"நான் சந்­திக்­கும் எல்­லோ­ரை­யும் நண்­பர்­க­ளா­கப் பார்க்­கிறேன். மற்­ற­வர்­கள் என்னை எந்­தக் கண்­ணோட்­டத்­தில் பார்த்­தா­லும் எனக்கு பிரச்சினை இல்லை. இது­தான் என்­னு­டைய வெற்றி, சக்­தி­யின் ரக­சி­யம்," என்­கி­றார் சந்­தா­னம்.

தமக்­கும் சில கவ­லை­கள் உள்­ள­தா­கக் குறிப்­பி­டு­ப­வர், அந்­தக் கவ­லை­கள் தம்மை வாட்டி வதைக்­கும் அள­வுக்கு மன­துக்­குள் கொண்டு செல்­வ­தில்லை என்­கி­றார். கடந்து போகும் மேகக்­கூட்­டங்­க­ளைப் போல், கவ­லை­கள் தம்­மைக் கடந்து­போக அனு­ம­திப்­ப­தா­கச் சொல்­கி­றார்.

தாம் நடிக்­கும் படங்­கள் நல்ல கருத்து­களை ஜாலி­யான முறை­யில் வெளிப்­படுத்த வேண்­டும் என நினைக்­கி­றா­ராம். கவலை­களை மறந்து மனம்­விட்­டுச் சிரிக்­கத்தான் பெரும்­பா­லான ரசி­கர்­கள் திரை­ய­ரங்கு­க­ளுக்கு வரு­வ­தா­கக் குறிப்­பி­டு­ப­வர், அத்­த­கைய ரசி­கர்­களை உற்­சாகப்படுத்த வேண்­டிய பொறுப்பு திரை­யு­ல­கத்­தினருக்கு உள்­ளது என்­கி­றார்.

"ஒரு கதா­நா­ய­க­னாக இயக்­கு­நர் கேட்­கும் விஷ­யத்­தைக் கொடுப்­பதே எனக்­கான பெரிய சவால். சில பகுதி­களை நகைச்­சு­வை­யா­கச் செய்­யுங்­கள் என்று சொல்­லும்­போது அதற்­கேற்ப நடிக்க வேண்டும். 'குலு குலு' படத்­தில் ஒரு கதா­நா­ய­க­னாக நான் கச்­சி­த­மா­கச் செயல்­பட்­ட­தாக நினைக்­கி­றேன்.

"ஒரு மனி­தன் எந்த நிலை­யில் இருந்­தா­லும் கவ­லை­கள் இல்­லா­மல் இருக்­காது. அந்­தக் கவ­லையை மறக்­கச் செய்­யு­ம் அ­ள­வுக்கு ஜாலி­யாக கதை சொல்லி ரசி­கர்­க­ளைச் சிரிக்க வைக்க வேண்­டும். அதே சமயம் நாம் சொல்ல வேண்­டிய கருத்­தை­யும் தெரி­விக்க வேண்­டும்," என்­கி­றார் சந்­தா­னம்.

ஒவ்­வொரு படத்­தி­லும் ஏதா­வது புது விஷ­யங்­க­ளைக் கையாள்­வது, புதிய கோணத்­தில் சிந்­தித்து ரசி­கர்­க­ளைச் சிரிக்க வைப்­பது என யோசித்­துச் செயல்­ப­டு­வ­தா­கச் சொல்­கி­றார்.

, :

  