"நான் கதைகளை மட்டுமே நம்பி படங்களில் நடிக்க ஒப்புக்கொள்கிறேன்,"
என்கிறார் மோனல் கஜ்ஜார்.
ஒரு படத்தின் வெற்றியானது நாயகன், நாயகியை மட்டுமே நம்பியிருக்கவில்லை என்றும் பேட்டி ஒன்றில் இவர் குறிப்பிட்டுள்ளார்.
"நான் நடிகையாக வாழ்க்கையைத் தொடங்கிய போது மொழி வேறுபாடு இருந்தது. இப்போது அதுபோன்ற வேறுபாடுகள், தடைகள் இல்லை. எந்த மொழியில் படம் எடுத்தாலும் நாடு முழுவதும் அதை வெளியிட முடியும். இந்த மாற்றம் மகிழ்ச்சி அளிக்கிறது. தனிப்பட்ட முறையில் எனக்கு நாயகன், நாயகி என்ற அமைப்பில் நம்பிக்கை இல்லை. கதையைத்தான் நம்புகிறேன். அதன் கதாபாத்திரத்தில் நடிகர்கள் நடிக்கிறார்கள், அவ்வளவுதான்," என்கிறார் மோனல்.
இயக்குநர் தங்கர் பச்சான் நீண்ட நாள்களுக்குப்பிறகு இயக்கும் படம் 'கருமேகங்கள் கலைகின்றன'. அவர் எழுதிய சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது. பாரதிராஜா, யோகி பாபு, கவுதம் வாசுதேவ் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பாதிக்குமேல் முடிந்துவிட்டது. இந்நிலையில், 'அருவி' புகழ் அதிதி பாலனை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
"இக்கதையின் ஆணிவேரான கதாபாத்திரத்தில் நடிக்க இந்தியாவின் அனைத்து மொழிகளில் இருந்தும் நடிகையைத் தேர்வு செய்ததில், இறுதியாக அதிதி பாலன் மிகவும் பொருத்தமாக அமைந்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். சவாலான இப்பாத்திரத்துக்கு அவர் மேலும் வலுவூட்டுவார் என நம்புகிறேன்," என்கிறார் தங்கர் பச்சான்.
ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் 'சிங்கப்பூர் சலூன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள் ளது. 'ரவுத்திரம்', 'இதற்குத் தானே, 'காஷ்மோரா', உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் இயக்கும் புதிய படம் இது. ஆர்.ஜே.பாலாஜி சிகையலங்கார நிபுணராக நடித்துள்ளார். இதற்காக சுமார் இரண்டு மாதங்களுக்கு சிகை அலங்கார நிபுணர்களிடம் பயிற்சி பெற்றாராம். சத்யராஜ, லால் உள்ளிட்ட அனுபவ நடிகர்கள் முக்கியக் கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். அடுத்த ஆண்டு கோடைக் காலத்தின்போது படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக ஆர்.ஜே.பாலாஜி தன் சமூக ஊடகப் பக்கத்தில் தெரி வித்துள்ளார். அவர் தான் தாடி, மீசையுடன் இருக்கும் தனது புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
ராமராஜன் நடிக்கும் 'சாமானியன்' படத்தில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் காவல்துறை அதிகாரி பாத்திரத்தில் நடிக்கிறார். கதையைக் கேட்காமலேயே இவர் அதில் நடிக்க ஒப்புக் கொண்டாராம். இரண்டு நாள் மட்டும் கால்ஷீட் கொடுத்தால் போதும் என்று இயக்குநர் கேட்க, எத்தனை நாள் வேண்டுமானாலும் நடிக்கத் தயார் என்று கே.எஸ்.ரவிக்குமார் கூறியுள்ளார். அதைக்கேட்டு ராமராஜன் உள்ளிட்ட மொத்த படக்குழுவினரும் வியப்படைந்தனராம். "ராமராஜன் சார் இயக்குநராக, கதாநாயகனாகக் கோலோச்சியபோது, நான் அவரது படங்களில் இணை இயக்குநராக வேலை செய்திருக்கிறேன். அந்த அடிப்படையில்தான் அவரது படத்திற்கு நடிக்கக் கேட்டதும் உடனே சம்மதித்தேன்," என்று தன் தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார் கே.எஸ்.ரவிக்குமார்.
, :

