வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் அடுத்து வெளியாகும் படத்துக்கு 'வி-3' என்று தலைப்பு வைத்துள்ளனர். கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் இளம்பெண் படுகொலை செய்யப்படுகிறாள். இந்த வழக்கின் விசாரணை பல்வேறு திருப்பங்களை எதிர்கொள்கிறது. இந்நிலையில், ஐஏஎஸ் அதிகாரியான வரலட்சுமி, பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராடி நீதி பெற்றுத்தருகிறார். இந்தக் கதாபாத்திரத்துக்கு அவர் கச்சிதமாக பொருந்தி உள்ளதாகச் சொல்கிறார் படத்தின் இயக்குநர் அமுதவாணன்.
இதற்கிடையே, 'கொன்றால் பாவம்' என்ற படத்தில் அப்பாவியான கிராமத்துப் பெண்ணாக நடித்துள்ளாராம். இந்தப் படமும் விரைவில் வெளியீடு காண உள்ளது.
நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் காதல்வயப்பட்டிருப்பதாக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தகவல் வெளியாகி வருகிறது. கடைசியாக இந்தி நடிகர் ஒருவரை அவர் காதலிப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வரின் மகனுக்கும் ஜான்விக்கும் இடையே காதல் மலர்ந்திருப்பதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது. எனினும், ஜான்வி தரப்பு இது குறித்து ஏதும் தெரிவிக்கவில்லை.
தென்னிந்திய மொழிகளில் தயாராகும் படங்களை இனி நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வெளியிடுவது என தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் முடிவு செய்துள்ளனர். எனவே முக்கிய கதாபாத்திரங்களில் சில இந்தி நடிகர், நடிகையரை நடிக்க வைக்க விரும்புகின்றனர். அந்த வகையில் இந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு மவுசு கூடியுள்ளது. 'கேஜிஎஃப்' படத்தை அடுத்து அவர் 'பாகுபலி' நாயகன் பிரபாஸ் நடிக்கும் புதுப் படத்திலும் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளார். இதேபோல் அஜித், விஜய், சிவகார்த்திகேயன் படங்களிலும் அவரை ஒப்பந்தம் செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தகவல்.
, :

