பாலா இயக்கும் 'வணங்கான்' படத்தில் இருந்து சூர்யா விலகியதை அடுத்து, அதில் நடிக்கப் போகும் நாயகன் யார் எனும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், அருண் விஜய்யிடம் இயக்குநர் பாலா கதை சொல்லி இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
பெரும் எதிர்பார்ப்புகளுடன் 'வணங்கான்' படத்துக்கான படப்பிடிப்பு தொடங்கியது. சில நாள்கள் சிக்கலின்றி எல்லாம் நடந்து கொண்டிருந்த நிலையில், திடீரென படத்தின் கதையில் பாலா சில மாற்றங்களைச் செய்ததாகவும் சூர்யாவுக்கு அதில் உடன்பாடில்லை எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில் இருவரும் மனம்விட்டுப் பேசியதை அடுத்து, சூர்யா அந்தப் படத்தில் இருந்து விலகிக் கொண்டார். அவருக்குப் பதில் அருண் விஜய் பொருத்தமாக இருப்பார் எனக் கருதினாராம் பாலா.
இடையில், தயாரிப்புத் தரப்பில் அதர்வாவின் பெயர் முன்மொழியப்பட்டதாகவும் அதற்குப் பாலா ஒப்புதல் வழங்கவில்லை என்றும் கூறப்படுகிறது. எதிர்வரும் பிப்ரவரி மாதம் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அருண் விஜய் அதில் பங்கேற்பார் என்றும் கூறப்படுகிறது.

