திரையுலகில் அறிமுகமாகி இருபது ஆண்டுகளைக் கடந்துள்ளார் நயன்தாரா. முதல் படத்தில் நடித்தபோது தமக்கு 18 வயது என்றும் அச்சமயம் பெரிய இலக்குகள் அல்லது லட்சியம் என்று எதுவும் இல்லை என்றும் அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வயதில் எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லை என்றும் எனினும் சில படங்களில் நடித்து முடித்த பின்னர் திரையுலகில் ஏதேனும் ஓர் ஒரத்தில் தமது பெயரும் இடம்பெற்றால் அதுவே போதும் என்ற எண்ணம் இருந்ததாகவும் கூறியுள்ளார் நயன்தாரா.
"ஓரளவு அனுபவம் பெற்றதும் வித்தியாசமான கதைகள், கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அந்தச் சமயத்தில் கதாநாயகிகளுக்கு பெரிதாக முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. பாடல் வெளியீடு அல்லது படத்துக்கான விளம்பர நிகழ்வுகளில் நம்மைக் கண்டுகொள்ள மாட்டார்கள்.
"ஓரமாக நிற்க வேண்டியிருக்கும். எப்போதேனும் ஒருமுறை கதாநாயகி குறித்து இரண்டொரு வார்த்தைகள் குறிப்பிடுவார்கள். இதன் காரணமாகவே நான் ஒரு படத்தின் எந்தவொரு விளம்பர நிகழ்வுகளிலும் பங்கேற்பதில்லை எனலாம்.
"பின்னாள்களில் நாயகிக்கு முன்னுரிமை அளிக்கும் படங்களில் நடிக்கத் தொடங்கினேன். இப்போது நிலைமை மாறிவிட்டது.
"இன்று பெண் கதாபாத்திரங்களை முன்னிலைப்படுத்தும் கதைகள் அதிக அளவில் வருகின்றன. இதுபோன்ற படங்களைத் தயாரிக்க நிறைய தயாரிப்பாளர்கள் முன் வருகிறார்கள்," என்கிறார் நயன்தாரா.
திருமணத்துக்குப் பின்னர் தமது திரையுலகப் பயணத்தில் பெரிதாக எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், அவ்வாறு எந்த மாற்றமும் ஏற்பட வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
"நாயகியை மையப்படுத்தும் படங்களைத் தயாரிக்க பல தயாரிப்பாளர் முன்வருகின்றனர். இது வரவேற்கத்தக்க மாற்றம். எங்களைப் போன்ற நாயகிகள் மீது தயாரிப்பாளர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அதனால் இயக்குநர்களுக்கும் நம்பிக்கை ஏற்பட்டு, எங்களுக்கேற்ற கதைகளை உருவாக்கத் தொடங்கி உள்ளனர்.
"இதற்கு ரசிகர்களும் முக்கியக் காரணம். நாயகியை முன்னிலைப்படுத்தும் படங்களைக் காண ரசிகர்கள் இப்போது திரையரங்குகளுக்கு வருகிறார்கள். அதனால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுவதில்லை. பல படங்கள் லாபத்தைப் பெற்றுத் தருகின்றன.
"என்னைப் பொறுத்தவரை அடுத்த கட்டத்துக்குப் போக விரும்புகிறேன். முன்னணி நாயகர்களின் படங்களுக்கு கோடிக்கணக்கில் செலவிடும் தயாரிப்பாளர்கள் உள்ளனர். அவர்கள் எங்களைப் போன்ற நாயகிகளை வைத்து அதுபோன்ற படங்களைத் தயாரித்தால் நன்றாக இருக்கும்," என்கிறார் நயன்தாரா.
இதற்காக தாம் சில முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், திரையுலகில் தாம் தொடர்ந்து பலவற்றை முயற்சி செய்து வந்துள்ளதாகவும் மேலும் சிலவற்றைச் சாதிக்க விரும்புவதாகவும் சொல்கிறார்.
அழகு, ஒப்பனை குறித்த கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ள அவர், ஒப்பனை என்பது நடிகைகளின் அன்றாட வாழ்க்கையோடு இணைந்துவிட்ட விஷயம் என்றார்.
"பொதுவாக ஒப்பனை என்பது பெண்களுக்கு தங்கள் அழகை மெருகூட்ட உதவும். ஆனால் என்னைப் பொறுத்தவரை ஒப்பனைப் பொருள்களை தெய்வமாகக் கருதுகிறேன்," என்று நயன்தாரா தெரிவித்துள்ளார்.
திருமண வாழ்க்கை இனிதே சென்று கொண்டிருப்பதாகவும் தமது தொழில் ரீதியிலான விஷயங்களில் பெரிய மாற்றங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றும் சொல்கிறார்.
"விக்னேஷ் சிவனை எனக்கு ஒன்பது ஆண்டுகளாகத் தெரியும். அன்று முதல் இன்றுவரை இருவரும் ஒரே மாதிரியாகத்தான் உள்ளோம். இப்போது இருவருக்கும் திருமணமாகிவிட்டது என்பது மட்டுமே வித்தியாசம்," என்கிறார் நயன்தாரா.
விக்னேஷ் சிவன் அடுத்து அஜித்தை வைத்து படம் இயக்கும் நிலையில், நயன்தாரா அதில் நாயகியாக நடிக்க உள்ளார்.
அந்தப் படத்துக்கான பணிகளில் விக்னேஷ் கவனம் செலுத்தி வருகிறாராம்.
நயன்தாராவும் அடுத்த படங்களில் நடிப்பதுடன் இருவரும் தங்களது படத் தயாரிப்புப் பணிகளிலும் கவனம் செலுத்துகின்றனர்.
, :

