'பொன்னியின் செல்வன்' படத்தின் வெற்றியை அடுத்து கோடம்பாக்கத்தில் திரிஷாவின் மவுசு கூடியுள்ளது. இந்நிலையில் நாயகியை முன்னிலைப்படுத்தி உருவாகி உள்ள 'ராங்கி' படத்தின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளார்.
'எங்கேயும் எப்போதும்' என்ற வெற்றிப் படத்தை அளித்த எம்.சரவணன் இயக்கியுள்ள படம் இது.
"கதையை எழுதி முடித்த உடனேயே திரிஷாதான் நாயகி வேடத்துக்குப் பொருத்தமாக இருப்பார் என முடிவு செய்து விட்டாராம்.
ஒரு படம் வெற்றியடைந்தால் அதில் நடித்த நாயகனும் நாயகியும் அடுத்த படமும் வெற்றிபெற வேண்டும் என்று நினைப்பது இயல்பு.
எனவே, ஓர் இடைவேளைக்குப் பிறகு அடுத்த படத்தை இயக்க வரும் இயக்குநருக்கு சில சிக்கல்கள் இருக்கும். அவர் அறிமுக இயக்குநரைப் போல் செயல்பட வேண்டியிருக்கும்.
இந்நிலையில் ஒரு வெற்றிப் படத்தை இயக்கிய பின்னர், சில காரணங்களால் அடுத்த படத்தை கொடுக்க இயலாத இயக்குநர், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் படம் இயக்க வரும்போது, அவர் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும்," என்கிறார் சரவணன்.
அடிதடி நிறைந்த படமாக உருவாகி உள்ளது 'ராங்கி'. இதில் துணிச்சல்மிக்க செய்தியாளராக தையல் நாயகி என்ற கதாபாரத்தில் நடித்துள்ளார் திரிஷா.
"ஒரு மூத்த செய்தியாளருக்கு உரிய அனுபவத்தை வெளிப்படுத்த வேண்டும். அதேசமயம் இளமையாகவும் துணிச்சல் மிகுந்த பெண்ணாகவும் காட்சியளிக்க வேண்டும். இதுதான் தையல் நாயகி என்ற கதாபாத்திரத்துக்குத் தேவையான அம்சங்கள்.
"கதையையும் கதாபாத்திரத்தையும் உருவாக்கிய பிறகு, திரிஷாதான் எனக்கு முதலில் நினைவுக்கு வந்தார். இந்தப் படத்தில் அவருக்கு காதல், ஊடல் உள்ள காட்சிகள் ஏதும் கிடையாது. அதற்காக படத்தில் காதலுக்கு இடமில்லை என்று முடிவு செய்துவிட வேண்டாம்.
"தாம் நம்பக்கூடிய ஒரு விஷயத்துக்கு எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய துணிச்சல் மிக்கவர் தையல் நாயகி. படத்தின் தலைப்பைக் கேட்டதும், அவர் அடாவடியான பெண் என்று நினைத்துவிடக்கூடாது. 'ராங்கி' என்ற வார்த்தை பொதுவாக எதற்கும் அடங்காத பெண் என்பதாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.
"உண்மையில் இதற்கான அர்த்தம் வேறு. தன்னை நம்பக்கூடிய துணிச்சல்மிக்க பெண் என்பதுதான் சரி. எனவேதான் இந்தத் தலைப்பை படக்குழுவில் இடம்பெற்றுள்ள அனை வரும் ஒருமனதாக தேர்வு செய்தோம்," என்கிறார் சரவணன்.
ராங்கி படத்தில் இடம்பெற்றிருந்த சில முக்கியமான காட்சிகளை நீக்க வேண்டும் என தணிக்கைக்குழு உத்தரவிட்டுள்ளது.
இதில் தமக்கு உடன்பாடு இல்லை என்கிறார் இயக்குநர் சரவணன்.
"எப்போதுமே வலிமையாக உள்ள ஒருவன், தமக்கு அடுத்தபடியாக உள்ளவர்கள், தனது இடத்தைப் பிடித்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள். நம்மைச் சுற்றி மனிதர்கள், அமைப்புகள், சமூகத்தில் இதுபோன்ற நிலைமை காணப்படும். எனது படத்தில் இரு நாடுகளுக்கு இடையே இதுபோன்ற பிரச்சினை எழுவதாக சித்திரிக்கப்பட்டுள்ளது.
"ஊடகச் செய்திகளில் குறிப்பிடப்படும் சில தகவல்களை நாம் உண்மை எனக் கருதுகிறேன். அதே தகவல்களை திரையில் காட்சிப்படுத்தும்போது எதிர்க்கிறார்கள். இந்த நிலைப்பாடு எனக்குப் புரியாத ஒன்றாக உள்ளது," என்று கேள்வி எழுப்புகிறார் சரவணன்.
ராங்கி படத்தின் முக்கியமான காட்சிகளை உஸ்பெகிஸ்தான் நாட்டில் படமாக்கி உள்ளனர். அங்கு நிலவிய கடுங்குளிர், பனிப்பொழிவுக்கு மத்தியில் மிகவும் சிரமப்பட்டு காட்சிகளை எடுத்தனராம்.
"மேலும், மொழிப் பிரச்சினையும் இருந்தது. தகவல் தொடர்பு என்பது கடினமான பணியாக மாறிவிட்டது. எனினும் அங்கு எடுக்கப்பட்ட காட்சிகளைப் பார்க்கும்போது, உழைப்பு வீணாகவில்லை என்ற மனநிறைவு கிடைத்தது.
"வெளிநாடுகள் சம்பந்தப்பட்ட விவகாரங்கள், அதற்கான களம், துணிச்சலான நாயகி என்று இந்தப் படத்தின் பல்வேறு அம்சங்கள் ரசிகர்களைக் கவரும் என நம்புகிறேன்.
"ஒரு சராசரி ரசிகனின் கோணத்தில் இருந்து பார்க்கும்போது இத்தகைய அம்சங்கள் ஒரு படத்தின் வெற்றிக்குத் தேவைப்படும். இதை நன்கு உணர்ந்துதான் இந்தப் படத்தை உருவாக்கி உள்ளேன்," என்று நம்பிக்கையுடன் பேசுகிறார் இயக்குநர் சரவணன்.
இவரது இயக்கத்தில் அடுத்து உருவாகும் படம் நாடு. இதில் பிக்பாஸ் புகழ் தர்ஷன் நாயகனாக நடிக்கிறார்.
"எனது முந்தைய படங்கள் ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபட்டவை. எனது அடுத்த படமும் அப்படித்தான் இருக்கும். இதை நம்புவதால்தான் திரிஷா எனது இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.
"என்னுடன் இணைந்து கடுமையாக உழைத்த அனைவருக்கும் நன்றி சொல்ல வேண்டிய தருணம் இது," என்கிறார் இயக்குநர் சரவணன்.
, :

