'மனதை ஒன்ற வைக்கும் படம்'

'மனதை ஒன்ற வைக்கும் படம்'

3 mins read
0e26deea-3865-433d-8f45-288b8509979d
-

வாணி போஜன் திற­மை­யான நடிகை என்­பது தெரிந்த விஷ­யம். ஆனால் தான் ஏற்­றுக்­கொண்ட கதா­பாத்­தி­ர­மாக மாறு­வது அவ­ருக்­குக் கைவந்த கலை­யாக உள்­ளது என்­கி­றார் இயக்­கு­நர் ஆர்.பி.பாலா.

இவர் இயக்­கி­யுள்ள 'லவ்' படத்­தில் பரத்­தும் வாணி போஜ­னும் இணைந்து நடித்­துள்­ள­னர். அண்மை­யில் இப்­ப­டத்­தின் முதல் தோற்­றச் சுவ­ரொட்டி சமூக ஊட­கங்­களில் வெளி­யி­டப்­பட்­டது. அதற்கு ரசி­கர்­கள் மத்­தி­யில் நல்ல வர­வேற்பு கிடைத்துள்­ளது.

ஏரா­ள­மா­னோர் அச்­சு­வ­ரொட்டி நன்­றாக உள்­ளது எனப் பாராட்டு தெரி­வித்­துள்­ள­னர். மேலும் கதைக்­களம் குறித்து தக­வல் வெளி­யிட வேண்­டும் என்­றும் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.

எனி­னும் கதை குறித்து இப்­போது ஏதும் சொல்ல இய­லாது என்­கி­றார் அறி­முக இயக்­கு­ந­ரான ஆர்.பி.பாலா.

"இது புது மாதி­ரி­யான திகில் படம். காதல், குடும்ப உணர்­வு­கள் என்­பன உள்­ளிட்ட மற்ற அம்­சங்­களும் உள்­ளன.

"என்ன கதை என்று மட்­டும் கேட்­டு­வி­டா­தீர்­கள். இப்­போதே சொல்­லி­விட்­டால் சுவா­ர­சி­யம் இல்லாமல் போய்­வி­டும். படம் பார்க்­கும்­போது தெரிந்து கொள்­வ­து­தான் சரி­யாக இருக்­கும்.

"இந்­தக் கதை­யு­டன் அனைத்­துத் தரப்பு ரசி­கர்­களும் மனம் ஒன்­றிப்­போக முடி­யும் என நம்­பு­கி­றேன். அண்மை­யில் வெளி­யான 'லவ் டுடே' படத்­தில் கைப்­பேசி தொடர்­பான காட்­சி­க­ளு­டன் ரசி­கர்­கள் ஒன்­றிப் போயி­னர்.

"அதே­போல் 'லவ்' படத்­தி­லும் ஒரு சுவா­ர­சி­ய­மான விஷ­யம் உள்ளது. அதை அனை­வ­ரும் ரசிப்­பர்.

"படம் தொடங்­கிய பத்து நிமி­டங்­க­ளுக்­குள் ரசி­கர்­கள் கதை­யு­டன் இணைந்­து­வி­டு­வார்­கள். கண­வன், மனைவி, மகள், மகன், காத­லன், காதலி என யாராக இருந்­தா­லும் அவர்­க­ளுக்­குப் பிடித்­த­மான அல்­லது பொருத்­த­மான விஷ­யம் இதில் உண்டு," என்கிறார் ஆர்.பி.பாலா.

'லவ்' படத்­தின் கதையை எழு­தி­ய­போது அதில் யாரை நடிக்க வைக்­க­லாம் என்று இவர் யோசிக்­கவே இல்­லை­யாம். எனி­னும் கதையை முழு­மை­யாக எழுதி முடிந்­த­தும் நடி­கர் பரத் பொருத்­த­மாக இருப்­பார் எனத் தோன்­றி­ய­தாம்.

"சில சம­யங்­களில் நாய­க­னுக்­காக கதையை மாற்ற வேண்­டிய அவ­சி­யம் எழும். ஆனால் பரத் கதைக்கு முக்­கி­யத்­து­வம் அளிப்­பார். நான் சொன்ன கதை நன்­றாக இருப்­ப­தாக அதைக் கேட்ட உட­னேயே பாராட்­டி­னார். மேலும், ஒரு நண்­ப­ரைப் போல் பழ­கி­னார். இயக்­கு­நர், நாய­கன் என்­பதை மீறி எங்­கள் இரு­வ­ருக்­கும் இடையே நட்பு மலர்ந்து, அது வலு­வாகி உள்­ளது.

"வாணி போஜன் இதற்கு முன் நடித்­துள்ள 'ஓ மை கட­வுளே', 'மிரள்' உள்­ளிட்ட சில படங்­க­ளைப் பார்த்­தபோது வெகு­வா­கக் கவர்ந்­தார். படம் பார்த்து முடித்த பிற­கும் அவ­ரது கதா­பாத்­தி­ரம் மன­தில் நிற்­கிறது எனில் அதற்கு இயல்­பான நடிப்­பு­தான் கார­ணம்.

"இதை உணர்ந்த பிறகு அவரை ஒப்­பந்­தம் செய்­தோம். பரத்­தும் வாணி­யும்­தான் 'லவ்' படத்­தின் இரு தூண்­கள்," என்­கி­றார் ஆர்.பி.பாலா.

'லவ்' என ஆங்கிலத்தில் தலைப்பு வைத்திருப்பது குறித்து சில சமூக ஊடகங்களில் விமர்சிப்பதை தானும் அறிந்திருப்பதாகக் குறிப்பிடுபவர், வேண்டுமென்றே இவ்வாறு செய்யவில்லை என்கிறார்.

"இப்போதெல்லாம் பெரும்பாலான திரைப் படங்களை நாடு முழுவதும் வெளியிடுவதில் திரையுலகத்தினர் ஆர்வம் காட்டுகின்றனர்.

"தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளப் படங்களும்கூட நாடு தழுவிய அளவில், ஒரே சமயத்தில் வெளியீடு காண்கின்றன. எனவே அனைவருக்கும் புரியக்கூடிய வகையில் தலைப்பு வைப்பது அவசியமாகிறது.

"திரையுலகத்தினருக்கு இது புரியும். சராசரி ரசிகர்களும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதால்தான் இந்த விளக்கத்தை அளிக்கிறேன்.

"தற்போது கிராமத்தில் வசிப்பவர்கள்கூட ஆங்கிலத்தைப் புரிந்துகொண்டு பேசுகிறார்கள். அந்த மக்களுக்கும்கூட 'சாரி', 'ஐ லவ் யூ' போன்ற வார்த்தைகளுக்கான அர்த்தம் புரிகிறது.

"எனவே மொழி, மாநில எல்லைகளைக் கடந்து அனைவருக்கும் புரியக்கூடிய தலைப்பாக 'லவ்' இருக்கும் என நம்புகிறேன்," என்கிறார் இயக்குநர் ஆர்.பி.பாலா.

'லவ்' படம் தமக்குப் பெயர் வாங்கிக் கொடுத்த தரமான படைப்புகளின் பட்டியலில் இடம்பெறும் என்கிறார் படத்தின் நாயகன் பரத்.

வாணி போஜன்