'பொன்னியின் செல்வன்' படத்தில் இடம்பெற்றுள்ள நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான் தனது நெடுநாள் விருப்பம் என்கிறார் மீனா.
திரையுலகில் இவர் அறிமுகமாகி நாற்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. தமது திரைப் பயணத்தில் பல்வேறு வாய்ப்புகளை இழந்திருந்தாலும், நந்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்தது தம்மைப் பொறாமைப்பட வைத்ததாக பேட்டி ஒன்றில் வெளிப்படையாகவும் உண்மையில் பொறாமை இன்றியும் குறிப்பிட்டுள்ளார் மீனா.
கணவரை இழந்து வாடிய வேளையில், தன்னைப் பற்றி வெளியான உண்மைக்குப் புறம்பான தகவல்களால் மிகுந்த வேதனை அடைந்தார், இப்போது மீண்டும் வழக்கமான பணிகளில் ஈடுபட்டுள்ளார். அண்மைய பேட்டியில் அவர் கூறியதைக் கேட்போம்:
"எனது திரையுலகப் பயணம் இவ்வளவு நாள் நீடிக்கும் என்றும் ஏராளமான படங்களில் நடிப்பேன் என்றும் கனவில்கூட நினைத்ததில்லை. திருமணத்துக்குப் பிறகு வாய்ப்புகள் தேடி வராது என்றுதான் நினைத்தேன். ஆனால் 'த்ரிஷ்யம்' போன்ற நல்ல பட வாய்ப்புகள் கிடைப்பது ஆச்சரியமாக உள்ளது.
"ஓரளவு பெயர் வாங்கிய பிறகு முன்னணி நாயகர்களுடன் நடித்தேன். எனினும் அன்றைய வேகமான ஓட்டத்தில் கதை கேட்டு நான் நடிக்கமுடியாமல் போன படங்களின் எண்ணிக்கை அதிகம்.
"அப்படித்தான் 'தேவர் மகன்' படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். ஆனால் கால்ஷீட் பிரச்சினையால் தொடக்கத்திலேயே நான் விலக வேண்டியதாயிற்று. 'பஞ்சவர்ணம்' கதாபாத்திரத்தில் ரேவதி நடித்துப் பெயர் வாங்கினார். அந்தப் படத்துக்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தபோது, நாம் நடிக்காமல் விலகிவிட்டோமே என்று தோன்றியது.
"பொன்னியின் செல்வன்' நாவலைப் படித்து வியந்திருக்கிறேன். அதைப் படமாகவோ, தொடராகவோ தயாரித்தால் அந்த நாவலில் வரும் 'நந்தினி' கதாபாத்திரத்தில் நடிக்க விரும்பினேன். அதனால் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் குறித்த தகவல்கள் வெளியானபோது, தொடர்ந்து ஆர்வத்துடன் கவனித்து வந்தேன்.
"அழகு, நடிப்பு என மொத்தக் கதையிலும் 'நந்தினி' கதாபாத்திரம் பெரிய தூணாக இருந்தது. இத்தனை ஆண்டுகளில் எத்தனையோ படங்களை இழந்திருந்தாலும், 'இந்தக் கதாபாத்திரத்தில் நாம் நடித்திருக்கலாமே...' என்று என்னைப் பொறாமைப்பட வைத்தது ஐஸ்வர்யா நடித்த 'நந்தினி' வேடம்தான்," என்கிறார் மீனா.
தாம் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த வேளையில், விஜய், அரவிந்த்சாமி ஆகிய இருவருடன் மட்டும்தான் இணைந்து நடிக்க முடியவில்லை என்று குறிப்பிடுபவர், இது தொடர்பாக விஜய் தன்னை அடிக்கடி கிண்டல் செய்வார் என்கிறார்.
"அஜித்துடன் இணைந்து நடித்துவிட்டேன். நான்கு படங்களில் விஜய்யுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் அவை கைகூடவில்லை. 'வளர்ந்து வரும் நாயகன் என்பதால்தானே நடிக்க மறுக்கிறீர்கள். அஜித்தானே உங்களுக்குப் பிடித்தமான நாயகன்' என்று விஜய் இப்போதும் கிண்டல் செய்வார்," என்கிறார் மீனா.

