முன்னணி கதாநாயகர்கள் நடிப்பில் வெளியாகும் படங்கள் வெற்றி பெறுவதில் அவர்களது ரசிகர்களின் கூட்டமும் முக்கியத்துவம் பெறுகிறது.
இதையடுத்து தங்களுடைய ரசிகர் மன்றங்களை புதிய வழியில் வழிநடத்துவது முக்கியம் என்பதை உணர்ந்துள்ளனர் அந்த கதாநாயகர்கள்.
நடிகர் சூர்யா தனது ரசிகர்களை விளம்பரம், வியாபார நோக்கத்துடன் பயன்படுத்துவதில்லை என்று பல்வேறு தரப்பினரும் பாராட்டுகின்றனர்.
சமூகச் சேவை, கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது உள்ளிட்ட நல்ல விஷயங்களில் தனது ரசிகர்களை ஈடுபடுத்தி உள்ளார் சூர்யா. அண்மையில் தனது ரசிகர் மன்றங்களின் மாவட்ட நிர்வாகிகளை சென்னையில் சந்தித்து அவர் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது அவர் வெளியிட்ட சில அறிவிப்புகள் ரசிகர் மன்ற நிர்வாகங்களை நெகிழ வைத்துள்ளதாம்.
தனது ரசிகர்களின் குடும்பத்தில் யாரேனும் கல்வி கற்க போதுமான பொருளாதார வசதிகள் இன்றி சிரமப்பட்டால் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுகிறார் சூர்யா.
தற்போது இன்னொரு படி மேலே சென்று, ரசிகர்களின் குடும்பத்தில் கல்வி கற்ற ஒருவர், மேல்படிப்பைத் தொடர விரும்பினால் அவருக்கும் உதவத் தயார் என்று அறிவித்துள்ளாராம் சூர்யா.
மேலும், தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு மருத்துவக் காப்பீடு பெறுவதற்கும் ஏற்பாடு செய்துள்ளார். மாநிலம் முழுவதும் கல்வி, சுகாதாரம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார் சூர்யா.
அதே போல் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் உயிரிழந்துவிட்டால் அவர்களது குடும்பத்தாருக்கு கணிசமான தொகையை வழங்கி வருகிறார். ரசிகர்களை வணிக நோக்கத்துக்காக பயன்படுத்தாமல் சமூகத்துக்கு உதவும் வகையில் சூர்யா வழிநடத்துவதாக சமூக ஆர்வலர்கள் பாராட்டுகின்றனர்.
நடிகர் அஜித்தைப் பொருத்தவரை, தனது ரசிகர் மன்றங்களை எப்போதோ கலைத்துவிட்டார். எனினும், அவரது படங்கள் வெளியாகும்போது திரையரங்குகளில் ரசிகர்கள் திரளாக கூடிவருகின்றனர். திரைப்பட விழாக்களில் அவரது பெயர் உச்சரிக்கப்படும்போது வரும் கைதட்டல் அடங்க ஓரிரு நிமிடங்கள் ஆகின்றன.
தமது ரசிகர்களுக்கும் தமக்கும் இடையேயான உறவை நிபந்தனையற்ற அன்பு என்று குறிப்பிடும் அஜித், ரசிகர்களை நேரில் சந்திப்பதும் இல்லை. எனினும், அவரது புதுப் படங்கள் அடுத்தகட்ட நகர்வு குறித்து அவரது மேலாளர் சமூக ஊடகங்களில் அவ்வப்போது சில தகவல்களை வெளியிட்டு வருகிறார்.
ஆண்டுக்கு ஒரு முறையாவது அஜித் தனது ரசிகர்களைச் சந்திக்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் வலியுறுத்துகின்றனர். ஆனால், ரசிகர்கள் முதலில் தங்களது குடும்பத்தைக் கவனிக்க வேண்டும், அதற்குப் பிறகே தனது ரசிகராக இருக்க முடியும் என்கிறார் அஜித்.
நடிகர் விக்ரம் தனது ரசிகர்கள் மூலம் அவ்வப்போது சில நல்ல காரியங்களைச் செய்து வருகிறார். அண்மையில் பா.ரஞ்சித் இயக்கத்தில் தாம் நடித்து வரும் 'தங்கலான்' படத்தின் படப்பிடிப்புக்காக கர்நாடகாவில் கோலார் தங்கவயல் பகுதிக்கு படக்குழுவினருடன் சென்றிருந்தார் விக்ரம்.
அதை அறிந்த அப்பகுதி மக்கள் திரளாகத் திரண்டுவந்து அவருக்கு வரவேற்பு அளித்துள்ளனர். அவரது ரசிகர்கள் படக்குழுவுக்கு பல்வேறு வகையிலும் உதவிகளைச் செய்தனராம். அவ்வாறு உதவ வேண்டும் என்று விக்ரம் கேட்டுக்கொள்ளவில்லை.
"மேலும், வணிக நோக்கத்துக்காக அவர் தமது ரசிகர்களைப் பயன்படுத்துவதில்லை. நல்ல விஷயங்களில் ஈடுபட வேண்டும் என்று மட்டும் தொடர்ந்து அறிவுரை கூறி வருகிறார்," என்று பாராட்டுகிறார்கள் கோடம்பாக்க விவரப் புள்ளிகள்.
தாம் அரசியல் ரீதியாகச் செயல்படவில்லை என்று விஜய்யே அறிவித்தாலும், ரசிகர்கள் நம்ப மாட்டார்கள் போலிருக்கிறது. தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை அவ்வப்போது நேரில் சந்தித்து ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார் விஜய்.
அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பு கிராமங்களில் தனது கட்சிக்கென நல்ல, வலுவான அடித்தளத்தை அமைக்க வேண்டும் என்பதே அவரது முதன்மை இலக்காக உள்ளதாம். இது தொடர்பாக மூத்த அரசியல் பிரமுகர் ஒருவரை அண்மையில் சந்தித்துப் பேசியதாகத் தெரிகிறது. சுமார் நான்கு மணிநேரம் இந்த ஆலோசனை நீடித்ததாம். அப்போது தனது தனிப்பட்ட மடிக்கணினியைக் கொண்டு தமது எதிர்காலத் திட்டங்கள் குறித்து விளக்கினாராம் விஜய்.
அவற்றைப் பார்த்து வியப்படைந்த அந்த மூத்த அரசியல் பிரமுகர், விஜய் தனது ரசிகர்களை சரியான பாதையில் வழிநடத்திச் செல்வதாகப் பாராட்டியதாகத் தகவல்.
, :

