ரசிகர்களின் விருப்பத்துக்கு ஏற்ப மிகப் பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது 'வாரிசு' படத்தின் இசை வெளியீட்டு விழா.
பல்வேறு விமர்சனங்கள், அரசியல் சர்ச்சைகளுக்கு மத்தியில் நடந்துள்ள இந்த விழா, ரசிகர்களுக்கு மிகுந்த மனநிறைவை அளித்துள்ளது என்ற வகையில், மகிழ்ச்சி அடைந்துள்ளாராம் விஜய்.
சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வின்போது, தன் ரசிகர்களுடன் இணைந்து செல்ஃபி காணொளி ஒன்றை எடுத்துக்கொண்டார் விஜய். அது சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்ட சில நிமிடங்களிலேயே ஏராளமான ரசிகர்களால் பார்த்து ரசிக்கப்பட்டது.
அந்த வகையில், புது சாதனைகளைப் படைத்துள்ளது.
இந்த விழாவில் விஜய் பேசிய ஒவ்வொரு வரிக்கும், அரங்கில் கூடியிருந்த ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
"யாரேனும் ஒருவர் உங்களை எதிர்த்து, பிரச்சனை செய்தால் நீங்கள் சரியான பாதையில் செல்கிறீர்கள் என்று அர்த்தம். தேவையான விமர்சனமும் தேவையில்லாத எதிர்ப்பும்தான் நம்மை வாழ வைக்கின்றன.
"கடந்த 1990களில் ஒரு நடிகர் போட்டியாளராக வந்தார். அவர் எனக்கு எதிராக நின்றார். நான் எங்கு சென்றாலும் அவர் வந்தார். அந்த போட்டியாளரின் வெற்றியால் நானும் கடினமாக ஓடினேன்.
"நான் அவரைவிட அதிக வெற்றிகளைப் பெற விரும்பினேன். அத்தகைய போட்டியாளர் நம் அனைவருக்கும் தேவை.
"அந்த போட்டியாளர் உருவான ஆண்டு 1992. அவர் வேறு யாருமல்ல, அவர் பெயர் ஜோசஃப் விஜய். ஆம். எனக்கு நானே முதன்மைப் போட்டியாளர்.
"உங்களுக்கு எப்போதும் ஒரு போட்டியாளர் தேவை. முதலில் உங்களுடன் போட்டியிடுங்கள், உங்களுக்கு நீங்களே சொந்த போட்டியாக இருங்கள்", என்றார் விஜய்.
இதைக் கேட்டதும் அரங்கில் பலத்த கைதட்டல் எழுந்தது.

