கொரோனா நெருக்கடியில் இருந்து தமிழ் சினிமா ஓரளவு மீண்டுவிட்டது எனலாம். மாதந்தோறும் வெளியீடு காணும் புதுப்படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
திரையரங்க வெளியீடு தவிர்த்து, ஓடிடி தளங்களிலும் பல படங்கள் வெளியீடு காண்கின்றன. இதனால் ஏராளமான புதுமுகங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கின்றன. அந்த வகையில் 2022ஆம் ஆண்டில் கோடம்பாக்கத்தில் பல புது நாயகிகள் அறிமுகமாகி உள்ளனர். அவர்களில் ரசிகர்களின் கவனம் ஈர்த்த சிலரைப் பற்றி பார்ப்போம்.
தெலுங்கில் 'உப்பெனா' படம் மூலம் அறிமுகமாகி குறுகிய காலத்தில் புகழ் பெற்றவர் கிரித்தி ஷெட்டி. அந்தப் படம் வெளியான வேகத்தில் மேலும் சில தெலுங்குப் படங்களில் வாய்ப்புகள் தேடி வந்தன. அதன் மூலம் தெலுங்கு தேசத்து இளசுகளின் தூக்கத்தைக் கெடுத்த இளம் நாயகியாக பெயரெடுத்துள்ளார்.
இந்நிலையில், கிரித்திக்கு தமிழ் ரசிகர்களிடமும் மவுசு அதிகரித்துள்ளது. அவரது பாந்தமான நடிப்பும் அசத்தும் நடனமும் தமிழ் இளையர்களை அவர் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
தமிழ், தெலுங்கில் தயாரான 'த வாரியர்' படம் மூலம் தமிழில் அறிமுகமானார் கிரித்தி. இந்தப் படம் விமர்சன ரீதியில் தேறவில்லை என்றாலும், கிரித்தியின் நடிப்பும் நடனமும் பேசப்பட்டது.
'புல்லட்' பாடலில் அவர் ஆடியுள்ள நடனத்தால் கவரப்பட்ட தமிழ் இயக்குநர்கள் அவரை அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
பாலா இயக்கத்தில் 'வணங்கான்' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வந்தார். எனினும் அந்தப் படத்தில் இருந்து சூர்யா விலகிவிட்டதால் தற்போது கிரித்தியும் அந்தப் படத்தில் இருக்கிறாரா இல்லையா என்பது தெரியவில்லை.
எனினும் 2023ஆம் ஆண்டில் கிரித்தி தமிழிலும் கோலோச்சுவார் என்பதே கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகளின் கணிப்பாக உள்ளது.
'வெந்து தணிந்தது காடு' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் சித்தி இட்னானி. இது முழுநீள அடிதடிப் படம்தான் என்றாலும், காதல் காட்சிகளுக்கும் கணிசமான இடத்தை அளித்திருந்தார் இயக்குநர் கௌதம் மேனன்.
அந்த கவித்துவமான காட்சிகளில் சித்த இட்னானியின் இயல்பான நடிப்பும் அழகும் ரசிகர்களைக் கிறங்கடித்தன. அதன் பலனாக தற்போது ஆர்யா ஜோடியாக ஒரு படத்திலும், 'நூறு கோடி வானவில்' என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இயக்குநர் சங்கரின் மகள் அதிதிக்கு தமிழ்த் திரையுலகம் சிவப்புக் கம்பள வரவேற்பை அளித்துள்ளது. 'விருமன்' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
முதல் படத்திலேயே மிக இயல்பாக நடித்து விமர்சகர்கள், ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றவர் இப்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக 'மாவீரன்' படத்தில் நடித்து வருகிறார்.
படக்குழுவினரிடம் நட்பாகப் பாசமாகப் பேசுவது, கலகலப்பாக வலம் வருபவர் என்று அனைவரிடமும் பாராட்டுகளைப் பெற்றுள்ள அதிதி, அடுத்தடுத்த படங்களில் வித்தியாசமான, சவாலான கதாபாத்திரங்களை எதிர்பார்க்கிறாராம். அதிதிக்கு இசையிலும் ஆர்வம் அதிகம். திரைப்படங்களில் பாடவேண்டும் என்றும் விரும்புகிறார்.
'கேஜிஎஃப்' கன்னடப் படத்தின் மூலம் பிரபலமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. அந்தப் படம் வெளியாகும் முன்பே தமிழில் விக்ரமுடன் 'கோப்ரா' படத்தில் இணைந்து நடித்தார்.
'கோப்ரா' பெரிய அளவில் பேசப்படவில்லை என்றாலும் 'கேஜிஎஃப்' படம் கைவிடவில்லை. அதனால் கன்னடத்தில் தொடர்ந்து வாய்ப்புகளைப் பெற்று வருகிறார் ஸ்ரீதிதி.
"தமிழில் முன்னணி நாயகர்களுடன் நடிக்க வேண்டும் என்பதுதான் எனது அடுத்த இலக்கு. முதல் படம் வசூலில் தோல்வி கண்டாலும் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமாகி உள்ளேன். அதுவே போதும்.
"என் நடிப்பில் அடுத்து வெளியாகும் படங்களின் வெற்றி எனக்காகப் பேசும். அதுவரை காத்திருப்பேன்," என்கிறாராம் ஸ்ரீநிதி ஷெட்டி.
கிரித்தி ஷெட்டி
, :

