இந்த கிறிஸ்துமஸ் வேளையில் காதலர் ஜாக்கி பாக்னானிதான் தமக்கு கிடைத்த மிகச் சிறந்த பரிசு என்கிறார் ரகுல் பிரீத் சிங்.
இதுகுறித்து இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ள அவர், தமது காதலருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
"வாழ்க்கை எப்போதுமே மகிழ்ச்சிகரமாக இருக்க வேண்டும் என்றுதான் நாம் அனைவரும் விரும்புகிறோம். என்னுடைய மகிழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இருப்பவர் ஜாக்கிதான்," என்று ரகுல் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர். ஜாக்கி பக்னானி இந்தித் திரையுலகின் முக்கிய தயாரிப்பாளர், நடிகர்களில் ஒருவராவார்.
சாகச முயற்சிகளில் ஈடுபடுவது என்றால் தமக்கு மிகவும் பிடிக்கும் என்கிறார் சம்யுக்தா ஹெக்டே. அண்மையில் ஆழ்கடல் முக்குளிப்பு தொடர்பான பயிற்சியில் தேர்ச்சி பெற்று அதற்கான சான்றிதழையும் வாங்கியுள்ளாராம். "கடந்த 2017ஆம் ஆண்டு முதல் ஆழ்கடல் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். இதற்கான சான்றிதழ் கடந்த 2019ஆம் ஆண்டிலேயே கிடைத்துவிட்டது. அதன் பிறகு அதே பயிற்சியில் இரண்டாம் கட்டத்திலும் தேர்ச்சி பெற்றதை அடுத்து புதுச் சான்றிதழ் கிடைத்துள்ளளது. பகல், இரவு என எந்த வேளையிலும் கடலுக்குள் நூறடி ஆழத்துக்குச் சென்று திரும்பும் அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது," என்கிறார் சம்யுக்தா.
'நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்' படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ள நிலையில், பல்வேறு தரப்பினரும் தொலைபேசியில் தொடர்புகொண்டு தமக்கு வாழ்த்து தெரிவித்ததாகச் சொல்கிறார் வடிவேலு. படத்தின் வெற்றி தயாரிப்புத் தரப்புக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்திருப்ப தாகவும் கூறுகிறார். "மாரி செல்வராஜ் இயக்கத்தில் நான் அடுத்து நடித்து வரும் 'மாமன்னன்' நல்ல கதையம்சம் உள்ள படம். இது மக்களுக்கு பிடித்த படமாக அமையும். 'சந்திரமுகி-2' படத்திலும் நடிக்கிறேன். நான் மீண்டும் திரைக்கு வந்ததை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். இது கடவுளுடைய ஆசீர்வாதம்," என்கிறார் வடிவேலு.
அஜித் நடிப்பில் 'துணிவு' படத்தை இயக்கி உள்ள ஹெச். வினோத், தமது அடுத்த படத்துக்கான பணிகளையும் சத்தமின்றி தொடங்கி உள்ளார். அவர் அடுத்து தனுஷ் படத்தை இயக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே 'துணிவு' படத்துக்காக வித்தியாசமான முறையில் விளம் பரங்கள் செய்யப்பட உள்ளன. முன்னணி நாயகனாக வளர்ந்த பிறகு அஜித் படத்துக்கு இவ்வாறு விளம்பரம் செய்யப்படுவது
இதுவே முதல் முறை என்கிறார்கள்.

