கொரோனா நெருக்கடியால் இரண்டு ஆண்டுகள் முடங்கிக்கிடந்த தமிழ்த் திரையுலகம் மெல்ல மீண்டு வருகிறது. 2022ஆம் ஆண்டில் சுமார் 200 படங்கள் திரையரங்குகளில் வெளியீடு கண்டன. ஓடிடி தளங்களில் 27 படங்கள் வெளியானதாக தெரிகிறது. குறைந்த செலவில் எடுக்கப்பட்ட பெரும்பாலான படங்கள் படுதோல்வி கண்டுள்ளன. அவற்றுள் பல படங்களுக்கு முன்னோட்டக் காட்சித் தொகுப்புகூட வெளியாகவில்லை.
சில படங்கள் குறித்து எந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை என்பதுடன், அவை திரையரங்குகளில் வெளியானது குறித்தும் யாருக்கும் தெரியவில்லை.
"இதுபோன்ற படங்களின் தயாரிப்பாளர்களுக்கு போட்ட முதலீட்டில் பத்து விழுக்காடுகூட திரும்ப கிடைத்திருக்காது. திரையரங்குகளில் ஒரு நாள்கூட தாக்குபிடிக்க முடியாமல் ஓடிவிடுகின்றன.
"சில படங்களை ஆக குறைந்த விலைக்கு விற்பதற்கு தயாரிப்பாளர்கள் முன்வந்த போதும் ஓடிடி தளங்கள் அவற்றை ஏற்கவில்லை," என்கிறார்கள் கோடம்பாக்க விவரப்புள்ளிகள்.
கடந்த ஆண்டு ரஜினிகாந்த் நடித்த எந்த படமும் வெளியாகவில்லை. எனினும் இதர முன்னணி நாயகர்களின் படங்கள் வெளியாகின. தமிழ்த் திரையுலகின் ஒட்டுமொத்த வசூல் ரூ.1,500 கோடியைக் கடந்திருக்கும் என ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. 'பொன்னியின் செல்வன்', 'விக்ரம்' ஆகிய இரு படங்களும் சேர்ந்து ரூ.900 கோடி வசூலைப் பெற்றன.
விமர்சன ரீதியில் பாராட்டுகளைப் பெற்ற சில படங்களின் வசூல் ஏமாற்றம் அளித்தன. 2022இல் வசூலில் சாதித்த சில படங்கள் குறித்து பார்ப்போம்.
*** மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின்செல்வன்' படம் ரூ.500 கோடி வசூல் கண்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இரண்டாம் பாகம் புத்தாண்டில் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.
இந்தப் படத்தின் மூலம் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி ஆகிய நாயகர்கள், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகிய நாயகிகளின் மவுசு கூடியுள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல், உலகளவிலும் திரை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது இந்தப் படம்.
*** கமல் இதுவரை நடித்த படங்களில் மிகப் பிரம்மாண்டமானது என்பதுடன், வசூலிலும் முதல் இடத்தைப் பிடித்துள்ளது 'விக்ரம்'. உலகளவில் சுமார் 400 கோடி ரூபாய் வசூலைப் பெற்றுள்ள 'விக்ரம்' படம் தமிழகத்திலும் சோடைபோகவில்லை.
இப்படத்தின் செயற்கைக்கோள் உரிமம் 110 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டதாகவும் தமிழகத்தில் ரூ.182 கோடி வசூலைப் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
*** விஜய், நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவான 'பீஸ்ட்' படம் பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருந்த நிலையில், வெளியீட்டுக்குப் பின் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இப்படத்தில் இடம்பெற்றிருந்த அரபிக்குத்து பாடல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது. உலகளவில் ரூ.220 கோடி வசூல் கண்ட 'பீஸ்ட்', தமிழகத்தில் ரூ.115 கோடி வசூலித்துக் கொடுத்ததாக கோடம்பாக்க விவரப்புள்ளிகள் கூறுகின்றன.
*** அஜித் நடிப்பில் வெளியான 'வலிமை' படம், தமிழகத்தில் 94 கோடி ரூபாய் வசூலைப் பெற்றது. இப்படத்தின் ஓடிடி செயற்கைக்கோள் உரிமங்களைத் தயாரிப்பு நிறுவனமே தன்வசம் வைத்துக்கொண்டது. உலகளவில் 200 கோடி ரூபாய் வசூல் பெற்றதாக கூறப்பட்ட போதிலும், அஜித் ரசிகர்களுக்கு இப்படம் முழு மன நிறைவை அளித்ததாகத் தெரியவில்லை.
*** சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'டான்' படத்தின் வசூல் அவருக்கே இன்ப அதிர்ச்சி அளித்திருக்கும். சிவா இதுவரை நடித்த படங்களில் முதன்முறையாக நூறு கோடி ரூபாய் வசூலைக் கடந்த படம் இதுவாகும்.
கடந்த ஆண்டு விஜய், அஜித்துக்கு அடுத்தபடியாக, அதிக வசூல் பெற்ற நாயகன் என்று பெயரெடுத்துள்ளார் சிவா. 'டான்' படம் தமிழகத்தில் மட்டும் ரூ.78 கோடி வசூலைப் பெற்றது. இதர உரிமங்கள் மூலம் தயாரிப்புத் தரப்புக்கு 30 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
*** கடந்த ஆண்டு கார்த்தி நடிப்பில் 'சர்தார்', 'விருமன்' ஆகிய இரு படங்கள் வெளியாகின. இரண்டுமே தயாரிப்புத் தரப்புக்கு ஓரளவு லாபத்தைப் பெற்றுத் தந்தன.
'சர்தார்' படம் ரூ.100 கோடி வசூலைக் கடந்ததாகவும் தமிழகத்தில் மட்டும் ரூ.52 கோடி வசூலைப் பெற்றதாகவும் கூறப்படுகிறது. 'விருமன்' படம் தமிழகத்தில் ஐம்பது கோடி ரூபாய் வசூல் கண்ட நிலையில், இதர உரிமங்கள் மூலம் 35 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
*** தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' ரசிகர்களின் மனதைக் கவர்ந்த படமாக அமைந்தது. இப்படத்துக்காக பெரிய அளவில் விளம்பரம் செய்யப்படவில்லை. காதல், குடும்ப உறவுகளைப் போற்றும் வகையில் படம் அமைந்துள்ளதாக விமர்சகர்கள் பாராட்டினர். உலகளவி லான வசூல் நூறு கோடியைக் கடந்த நிலையில், தமிழகத்தில் மட்டும் ரூ.75 கோடி வசூலைப் பெற்றது இப்படம்.
*** பிரதீப் ரங்கநாதன் நடித்து, இயக்கிய 'லவ் டுடே' படத்தின் தயாரிப்புச் செலவு ஐந்து கோடியைக்கூட எட்டவில்லை. ஆனால், தமிழகத்தில் மட்டும் இந்தப் படம் 55 கோடி ரூபாய் வசூலைப் பெற்றுத்தந்தது.
தமிழில் எந்தவொரு அறிமுக நடிகரின் படமும் இப்படியொரு வசூலையும் வெற்றியையும் ஒருசேர பெற்றதில்லை என்கிறார்கள்.
*** விஜய் சேதுபதி நடித்து, விக்னேஷ் சிவன் இயக்கிய 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படம் தமிழகத்தில் 32 கோடி ரூபாய் வசூல் கண்டது.
, :

