முன்புபோல் பெரிய படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தமக்கான நல்ல வாய்ப்புகள் தேடி வருவது மகிழ்ச்சி அளிப்பதாகச் சொல்கிறார் லட்சுமி மேனன்.
இவர் கதை நாயகியாக நடித்துள்ள புதுப் படம் 'மலை'. அறிமுக இயக்குநர் முருகேஷ் இயக்குகிறார்.
ஒரு மலைக்கிராமத்தில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்புதான் இந்தப் படத்தின் கதை. நகரத்தில் வசிக்கும் படித்த பெண்ணுக்கு வெளிநாட்டில் வேலை பார்க்க வேண்டும் என்பது கனவு. ஆனால் குடும்பத்தின் நிர்பந்தம் காரணமாக கிராமத்துக்கு வருகிறார்.
"அந்தப் பெண் கிராமத்தில் என்ன கற்றுக்கொண்டார், வாழ்க்கை அந்தப் பெண்ணுக்கு என்ன சொல்லிக்கொடுத்தது என்பதை சுவாரசியமான திரைக்கதையில் விவரித்துள்ளேன்," என்கிறார் இயக்குநர் முருகேஷ்.
இப்படத்தின் நாயகியாக நடிக்கக்கேட்டு ஐஸ்வர்யா லட்சுமி, அஞ்சலி, ஆண்ட்ரியா, சாய்பல்லவி உட்பட பதினைந்துக்கும் மேற்பட்ட நாயகிகளை அணுகிப் பேச்சுவார்த்தை நடத்தினாராம்.
சிலருக்கு கதை பிடித்திருந்தாலும் கால்ஷீட் ஒதுக்க முடியவில்லையாம். சிலருக்கோ, அறிமுக இயக்குநரின் படம் என்ற தயக்கம் இருந்துள்ளது. அவர்களில் யாருமே நடிக்க முன்வராத நிலையில், லட்சுமி மேனனை சந்தித்து கதை சொல்லி இருக்கிறார்.
"தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியபோது, நேரில் வருமாறு கேட்டுக்கொண்டார். உடனே கேரளாவுக்குச் சென்று சந்தித்தேன். இரண்டரை மணி நேரக் கதையை முழுமையாகக் கேட்டு முடித்த பின்னர், தனக்கான ஊதியம் குறித்து கூட ஏதும் பேசாமல் கால்ஷீட் ஒதுக்க முன்வந்தார்.
"அவரது கதாபாத்திரத்தின் பெயர் மலர். படப்பிடிப்பின்போது நூறு விழுக்காட்டுக்கும் அதிகமாக ஒத்துழைத்து நடித்தார்.
"எனக்குத் தெரிந்து கதாபாத்திரத்தை உணர்ந்து நடிக்கும் நடிகைகள் தமிழ் சினிமாவில் குறைவு. லட்சுமி மேனனுக்கு அந்தத் திறமை உள்ளது. தவிர காட்சிகளை மெருகேற்றும் அறிவாற்றலும் அவரிடம் உண்டு.
"யோகிபாபு சுருளி என்ற போலி மருத்துவராக நடித்துள்ளார். மஞ்சப்பையில் ஊசி, மருந்து, மாத்திரை என்று தூக்கிக்கொண்டு அலையும் அவருடைய கதாபாத்திரம் ரசிகர்களை வாய்விட்டுச் சிரிக்க வைத்து வயிற்றைப் புண்ணாக்கும் என்பதற்கு இப்போதே உத்தரவாதம் தர இயலும்," என்கிறார் இயக்குநர் முருகேஷ்.
'மலை' படத்தின் ஒவ்வொரு காட்சியும் யோகி பாபுவுக்கு அத்துப்படியாம். அவருக்கு இந்தக் கதை ஏற்கெனவே சொல்லப்பட்டதாம்.
"ஒரு கட்டத்தில் இந்தப் படத்தை யோகிபாபுவே தயாரிக்க ஆர்வமாக இருந்தார். அதன் பிறகு சில மாற்றங்கள் நடந்ததால் அது சாத்தியமாகவில்லை. எனினும் நான் தேடிச்சென்று கால்ஷீட் கேட்டதும் நடிக்க முன்வந்தார்.
"காளிவெங்கட்டுக்கு முக்கியமான கதாபாத்திரம். வழக்கம்போல் நடிப்பில் அசத்தி உள்ளார். சிங்கம்புலி, கவிதாபாரதி, 'டாணாக்காரன்' பிரகதீஸ்வரன், செம்மலர் அன்னம், மோகனப்ரியா என படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொருவருக்கும் முக்கியத்துவம் இருக்கும்.
"இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப வல்லுநர்களும் எனது பதினைந்து ஆண்டுகால நண்பர்கள்.
"இசையமைப்பாளர் டி.இமான் தனது வழக்கமான பாணியில் இருந்து விலகி இயற்கையோடு இரண்டறக் கலந்துவிட்டதுபோல் எளிமையான, வருடிக்கொடுக்கும் இசையை அளித்துள்ளார்.
"படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள். அவற்றுள் தன்னம்பிக்கையை அளிக்கும் வகையிலான பாடல் இளையர்களைக் கவரும். அந்தப் பாடலை வாணி ஜெயராம் பாடியுள்ளார்.
"தேவையில்லாத காட்சிகள் எதுவுமே படத்தில் இருக்காது. அதேசமயம் படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு காட்சியும் ரசிக்க வைப்பதாக இருக்கும்.
"மலைக்கிராமத்தைப் போல் அரங்கு அமைத்து பல காட்சிகளைப் படமாக்கி உள்ளோம். ஆனால் செயற்கை கிராமம் என்பதை யாராலும் கண்டுபிடிக்க இயலாது," என்கிறார் இயக்குநர் முருகேஷ்.
, :

