செய்திக்கொத்து

2 mins read

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள 'துணிவு' படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியாகி இருக்கிறது. 1.51 நிமிடம் ஓடும் இந்த முன்னோட்டக் காட்சியில் வங்கி ஒன்றில் கொள்ளையடிக்க அஜித் குழுவினர் நுழைகின்றனர். அங்குள்ளவர்களைப் பிணைக் கைதிகளாக பிடித்து வங்கியில் உள்ள பணத்தை கொள்ளை அடிக்கின்றனர். காவல்துறை சுற்றி வளைக்க, தேசிய அளவில் இந்தச் செய்தி பரபரப்பாகிறது. இதன் மூலம் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி இருப்பது தெரிகிறது. முன்னோட்டக் காட்சியில் சண்டை, துப்பாக்கி, வெடிச் சத்தம் ஆகியவை கேட்டாலும் 'மங்காத்தா' பாணியில் அஜித் செய்யும் சில செய்கைகள் ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளன.

"மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்கிறாயே! வெட்கமா இல்லை?" என பிரேம் கேட்க, அதற்கு அஜித் சிரித்துக்கொண்டே, "இல்லை என்று சொல்வதும் ஹீரோ வேலையை நான் பார்த்துக்குறேன், என்ன மாதிரி ஓர் அயோக்கிய பய மேல கை வைக்கலாமா?'' போன்ற வசனங்களில் அவர் சிரித்துக்கொண்டே பேசுவது ரசிகர்களை ஈர்த்துள்ளது. குறிப்பாக வங்கியில் துப்பாக்கியுடன் அவர் ஆடும் நடனம் வித்தியாசமான அஜித்தை பார்க்க வைத்துள்ளது. இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இயக்குநர் ராஜமவுலி தற்பொழுது தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை வைத்து ரூ.1,000 கோடி செலவில் ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இதற்கு இயக்குநரின் தந்தை கதை எழுதி இருக்கிறார். அதுபற்றி ராஜமவுலியின் தந்தை கூறுகையில், "இந்தப் படம் இரண்டு அல்லது நான்கு பாகங்களாக வெளிவரலாம்," என்று குறிப்பிட்டுள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கட்டடம் கட்டும் பணி தொடர்ந்துகொண்டே செல்கிறது. நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் சென்ற சங்கத் தேர்தலின்போது, "வங்கியில் கடன் வாங்காமலேயே கட்டடத்தைக் கட்டி முடிப்பேன்," என்று கூறியிருந்தார். ஆனால் அதற்கான நிதி கிடைக்காததால் தற்பொழுது தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.30 கோடிக்கு கடன்பெற ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளார். கடன் தொகைக் கிடைத்ததும் ஆறு மாதத்தில் கட்டடம் கட்டி முடிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

நிதின் சத்யா நடிப்பில், சுரேஷ் சாத்தையா இயக்கத்தில், இராமநாதபுரம் மாவட்ட இறால் வளர்ப்பு பண்ணையின் பின்னணியில் உருவாகி வருகிறது 'கொடுவா' என்ற படம். இந்தப் படத்தில் நிதின் சத்யாவின் காதலியாக சம்யுக்தா மீனவப் பெண்ணாக நடித்திருக்கிறார். இதற்கு முன் சில படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சம்யுக்தா.

தீபிகா படுகோனும் ஷாருக்கானும் நடித்திருக்கும் படம் 'பதான்'. இந்தப் படத்தில் இருவரும் கவர்ச்சியாக ஒரு பாடல் காட்சியில் நடித்திருந்தார்கள். அந்தப் பாடலுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பி இருந்தது. இந்நிலையில் படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு பாடலின் பல காட்சிகளை நீக்கவேண்டும் என்று கூறியுள்ளது. அதனால் கஷ்டப்பட்டு எடுத்த படக் காட்சிகளை நீக்கவேண்டுமே என்ற வருத்தத்தில் இருக்கிறார்கள் படக்குழுவினர்.