வெற்றி மாறன் இயக்கி வரும் 'விடுதலை' படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது. இதை அப்படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
சூரி நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டதைவிட அதிக நாள்கள் நீடித்தன. ஒரு கட்டத்தில் வெற்றி மாறன் இப்படத்தை தற்காலிகமாக கைவிட்டதாகவும் கூறப்பட்டது.
படப்பிடிப்பு பாதி முடிவடைந்த நிலையில், திடீரென்று விஜய் சேதுபதியை முக்கியக் கதாபாத்திரத்தில் ஒப்பந்தம் செய்தார் வெற்றி மாறன். இதனால் தனக்குள்ள முக்கியத்துவம் குறைந்துவிட்டதாக சூரி வருத்தத்தில் உள்ளார் என்று செய்தி வெளியானது.
ஆனால், இப்படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்க முடிவெடுத்த வெற்றி மாறன், முதல் பாகத்தில் சூரிக்கும் இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதிக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் திரைக்கதையை மாற்றி அமைத்துள்ளாராம்.
இரு பாகங்களையும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது.
"இரண்டாம் பாகத்துக்கான படப்பிடிப்பையும் கச்சிதமாக முடித்துள்ளார் வெற்றிமாறன். படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்புகள் நிலவுவதை அவர் அறிந்துள்ளார். அதனால்தான் இரு பாகங்களையும் ஒருசேர படமாக்கி முடித்துள்ளார்," என்கிறார் நாயகன் சூரி.