'ஜெய் பீம்' திரைக்கதையை நூல் வடிவில் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளார் சூர்யா. அவரது '2டி' நிறுவனம் இதற்கான வேலைகளைச் செய்து வருகிறது.
வெறும் திரைக்கதை நூலாக அல்லாமல், படத்தின் உருவாக்கத்தில் பங்கெடுத்தவர்களின் உரையாடல்களையும் உள்ளடக்கி வெளியாகிறது இந்நூல்.
இதற்காக சூர்யா பதிவு செய்துள்ள விஷயங்கள் அவர் திரைப்பட நடிகரான பிறகு கடந்த இருபத்து ஐந்து ஆண்டுகளில் எப்படி எல்லாம் உருமாறி உள்ளார் என்பதை தெளிவாகப் புரிய வைக்கும் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். சூர்யாவும் இதை ஒப்புக்கொள்கிறார்.
"நான் எவ்வளவோ மாறியிருக்கிறேன். வயது, அனுபவம், திருமணம், குடும்பம், அகரம் அமைப்பு என வாழ்வின் முக்கியமான மாற்றங்களை எதிர்கொண்டே பயணம் செய்கிறேன். வீட்டில் மகன் என்கிற இடத்தில் இருந்து, கணவன், தகப்பன் எனப் பொறுப்புகள் விரிவடைந்திருப்பது போலவே சமூகத்திலும் எனக்கான பொறுப்புகள் விரிவடைந்திருக்கின்றன.
"எனது 'அகரம் பவுண்டேஷன்' போன்ற கல்வி உதவி இயக்கம் தற்செயலாக என் வாழ்வில் வந்திருக்கலாம். அது எனக்குக் காட்டிய உலகமும் அறிமுகப்படுத்திய உறவுகளும் அசாதாரணமானவை. இவை எல்லாமும் சேர்ந்துதான் நம் வேலையை, செயல்பாட்டைத் தீர்மானிக்கின்றன.
"எங்கள் வீட்டில் ஜோதிகாவையே எடுத்துக்கொள்ளுங்கள். அவருக்கு மிகக் கறாரான பார்வை உண்டு. நான் நடித்த சில படங்களை அவர் பார்த்ததே இல்லை. 'நான் இந்தப் படத்தைப் பார்க்க மாட்டேன்' என்று என்னிடமே வெளிப்படையாகச் சொல்லிவிடுவார்.
"சில நேரங்களில், 'ஏன் இந்த மாதிரியான வசனங்களை எல்லாம் பேசுகிறீர்கள்' என்று வருத்தப்படுவார். ஆரம்பக்கட்டத்தில் ஒரு தொழிலில் நாம் காலூன்றாதபோது அன்றைக்கான வேகத்தில் சில விஷயங்களைத் தெரிந்தும் தெரியாமலும் செய்துவிடுகிறோம். அதன் பிறகும் அப்படியே இருக்க வேண்டிய தேவை இல்லை என்பது அவரது பார்வை. அவருடைய இந்த எண்ணத்தை நான் மதிக்கிறேன்," என்கிறார் சூர்யா.
திரையுலகில் தமக்கு கமல்ஹாசன்தான் முன்மாதிரி என்று குறிப்பிடுபவர், வணிகச் சந்தைக்கான படங்களைத் தருவதுடன் நல்ல பரிசோதனை முயற்சிகளிலும் கமல் ஈடுபடுவது அவரைப் பெரிதும் மதிக்க வைப்பதாகச் சொல்கிறார்.
"தோல்விகளால் கமல் ஒருபோதும் துவண்டு போகமாட்டார் என்பதுதான் அவரிடம் நான் பெரிதும் மதிக்கும் விஷயம். பெரிய தோல்விப் படத்தைக் கொடுத்திருப்பார்; ஆனால் அடுத்து வரும் போதும் இன்னும் பெரிய படத்துடன்தான் வருவார். அதுவும் பாதுகாப்பான ஒரு படமாக இருக்காது.
"இதுகுறித்து பலமுறை யோசித்திருக்கிறேன். அவர் நினைத்தால் ஒரு தோல்வியிலிருந்து மிக எளிதாக வெளியே வந்திருக்கலாம் 'சகலகலா வல்லவன்' மிகப்பெரிய வசூல் வெற்றியைத் தந்த படம். ஒரு தோல்விக்குப் பிறகு அவர் அதேபோன்ற படத்துடன் திரும்ப வந்திருக்கலாம். ஆனால் அவரோ, அடுத்து 'அபூர்வ சகோதரர்கள்' போன்ற படைப்பு குறித்துதான் யோசிக்கிறார்.
"இது எனக்கு வாழ்நாள் பாடம் போலவே இருக்கிறது. எளிமையான வெற்றியைவிட அர்த்தமுள்ள வெற்றியே எனக்கு வேண்டும். அதேசமயம் ரசிகர்களால் பேசப்படும் நல்ல படமாகவும் அது இருக்க வேண்டும்.
"என்னைப் பொறுத்தவரை 'சிங்கம்' படம் போன்ற வெற்றிகளும் தேவை.
"அதற்குப் பின் 'ரத்த சரித்திரம்' போன்ற படங்களையும் விரும்பித்தான் தேர்ந்தெடுக்கிறேன். நிச்சயமாக அது பரிசோதனை முயற்சிதான். எனக்கு நானே வைத்துக்கொள்கிற தேர்வு," என்கிறார் சூர்யா.
'ஜெய் பீம்' படத்தைப் பார்த்துவிட்டு கமல்ஹாசன் சுமார் அரைமணி நேரம் பேசினாராம். அப்போது எந்த இடத்திலுமே இந்தப் படம் தமக்கு ஒரு திரைப்படைப்பாகத் தெரியவில்லை என்றாராம்.
"நான் யாரை என் முன்னோடி என்று சொல்கிறேனோ, அவரே சொன்ன வார்த்தைகள் இவை. 'நான் இந்த மாதிரி படங்களைச் செய்யத்தான் ஆசைப்படுகிறேன். ஆனால், என்னிடம் யாரும் இப்படி ஒரு கதையை எடுத்து வரவே இல்லை. பொறாமையாக இருக்கிறது' என்றார் கமல்.
'இந்தத் திரைக்கதை அமைப்பின் மேல் எப்படி நம்பிக்கை வைத்து முடிவெடுத்தீர்கள்?' என்று அவர் கேட்டபோது, 'பரவாயில்லை, நாமும் கொஞ்சம்போல ஏதோ செய்கிறோம்' என்று நினைத்துக் கொண்டேன்.
"சூரரைப் போற்று', 'ஜெய் பீம்' இரண்டு படங்களுமே ஓடிடி வழியே வெளியானவை என்றாலும், திரையரங்கிலும் நாங்கள் சிறப்புக் காட்சிகளைப் பார்த்திருந்தோம். 'சூரரைப் போற்று' படம் முழுக்கக் கைதட்டல், விசில். 'ஜெய் பீம்' முழுக்க அமைதி. இடைவேளையில்கூட யாரும் பேசிக்கொள்ளவில்லை. ஜோதிகா 'இது பெரிய தாக்கத்தை உருவாக்கும்' என்றார். இரண்டு படங்களுமே எனக்குப் பிடித்திருந்தது," என்கிறார் சூர்யா.

