'வாரிசு' படத்தில் நடித்தது தமது திரை வாழ்க்கையில் மறக்க முடியாத இனிய அனுபவம் என்கிறார் நடிகர் ஷாம்.
தமிழகமே கொண்டாடும் விஜய்யின் எளிமையும் தொழில் ஈடுபாடும் மற்றவர்களை அரவணைத்துச் செல்லும் குணமும் தம்மை வெகுவாக ஆச்சரியப்படுத்தியதாக அவர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
"விஜய் அனுபவ நடிகர் என்பது தெரியும். ஆனால் எத்தகைய காட்சியாக இருந்தாலும் ஒத்திகை ஏதும் பார்க்காமல் முதல் 'டேக்'கிலேயே நடித்து விடுவார். அதனால்தான் இந்த உயரத்தில் இருக்கிறார்.
"இப்படத்தில் அவரது ரசிகர்களுக்குப் பிடித்தமான 'மாஸ்' காட்சிகள் அதிகம் இருக்கும். விஜய்யிடம் நிறைய கற்றுக்கொண்டேன். எவ்வளவு பெரிய உயரத்தை அடைந்தாலும் அமைதியாக இருக்கவேண்டும் என்பதுதான் அவரிடம் கற்ற முக்கியமான பாடம்," என்கிறார் ஷாம்.
தமது ரசிகர்கள் மீது விஜய் மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்டுள்ளதாகக் குறிப்பிடுபவர், எப்போதும் ரசிகர்கள் குறித்தே அவர் பேசிக்கொண்டிருப்பதாகவும் சொல்கிறார்.
'வாரிசு' படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடித்துள்ளார் ஷாம். அவரது கதாபாத்திரம் எப்படிப்பட்டது என்பது தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு யூகங்கள் வலம் வருகின்றன. எனினும் அது குறித்து தம்மால் இப்போது எந்த விவரத்தையும் அளிக்க இயலாது என்கிறார்.
"தற்போது வெங்கட் பிரபு இயக்கிய 'பார்ட்டி' படத்தில் நடித்து இருக்கிறேன். மேலும் சில படங்களிலும் நடித்து வருகிறேன்.
"விரைவில் புதிய படம் ஒன்றைத் தயாரிக்கவும் முடிவு செய்துள்ளேன். விஜய் மில்டன் இயக்கும் 'கோலி சோடா 3' படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்," என்கிறார் ஷாம்.

