தமிழ் சினிமாவில் சில ஆண்டுகளாக முன்னணி நடிகர்களின் புதிய படங்கள் வெளியாகும்போது ரசிகர் மன்ற காட்சிகள் என்ற பெயரில் அதிகாலை காட்சிகள் வெளியிடப்படுகின்றன.
அந்தக் காட்சிகளில் ரசிகர் மன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருப்பார்கள். 11ஆம் தேதி வெளியான 'துணிவு', 'வாரிசு' படங்களின் முதல் காட்சியும் விஜய், அஜித் ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்டன.
அதனால் ஒரே திரையரங்கில் இரண்டு முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் ஒன்று கூடியபோது, அடிதடி, சச்சரவு, மோதல் ஏற்பட்டது. அதனால் அதிகாலைக் காட்சிகளை நிரந்தரமாக நிறுத்தவேண்டும் என்று பல சமூக ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அடிதடி, மோதல்
அதிகாலை காட்சிகளில் இருவரது ரசிகர்களுக்கும் இடையில் பல மோதல் சம்பவங்கள் நடைபெற்றன. குறிப்பாக சென்னையில் ஒரு திரை
யரங்கில் விஜய், அஜித் ரசிகர்கள் இடையே ஏற்பட்ட மோதலால் திரை
யரங்கு அடித்து நொறுக்கப்பட்டது. பதாகைகள், சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டன.
எல்லாவற்றுக்கும் மேலாக பொதுமக்கள் அந்த நேரங்களில் சாலைகளில் செல்லமுடியாத அளவுக்கு போக்கு
வரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதனால் தேவையற்ற மோதலைத் தவிர்க்க அதிக அளவில் காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர்.
திமுக அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் குடும்பத்துக்கு தொடர்புடைய 'ரெட்ஜெயண்ட் மூவிஸ்' நிறுவனம் இரண்டு படங்களையும் வெளியிடுவதால்தான் நள்ளிரவு, அதிகாலை காட்சிகளுக்கு அரசு அனுமதி அளிக்கிறது. அவர்கள் வெளியிடாத படங்களுக்கு இதுபோன்ற காட்சிகளை அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.
கண்டுகொள்ளாத நடிகர்கள்
ஒரே நாளில் இரண்டு முன்னணி நடிகர்
களின் படங்களை வேண்டுமென்றே வெளியிட்டு ஏட்டிக்குப் போட்டியாக இப்படி ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தை அரங்கேற்றிய இரு நடிகர்களுக்குமே மறைமுகமான பங்கு உண்டு. பட வெளியீட்டின்போது உயிரிழந்த ரசிகருக்காக சம்பந்தப்பட்ட நடிகர் தரப்பிலிருந்து இதுவரை எந்த ஓர் இரங்கலும் தெரிவிக்கப்படவில்லை.
இறந்த இளைஞரின் சித்தியும் நண்பர்களும் வெளியிட்ட காணொளியை சம்பந்தப்பட்ட நடிகர்கள் பார்த்திருந்தால் இனியாவது தங்களது படங்களுக்கு அதிகாலை காட்சிகள் வேண்டாம் என்று சொல்வார்கள்.
இதுபற்றி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறுகையில், "ரசிகர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டும். இது வெறும் சினிமாதான். உயிரை விடும் அளவிற்கு இதற்கு முக்கியத்துவம் தர வேண்டியதில்லை. மகிழ்ச்சியாக படத்தை பார்த்துவிட்டு பத்திரமாக வீட்டிற்கு சென்றாலே போதும். உயிர் போகும் அளவிற்கு கொண்டாட்டம் தேவையில்லை," என்று கூறியுள்ளார்.
இதுபோல் சம்பந்தப்பட்ட நடிகர்களும் கூறினால் ரசிகர்கள் கேட்பார்கள். ஆனால் அவர்கள்தான் கண்டுகொள்ளவில்லையே என்கிறது கோலிவுட்.

