தமிழில் தயாரான 'வாரிசு' படம் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு நேற்று வெளியாகியுள்ளது. தமிழில் எடுக்கப்படும் படங்கள் மற்ற மொழிகளில் வெளியானால் படக்குழுவினர் அந்தப் பகுதிகளில் படத்திற்கான விளம்பர நிகழ்ச்சியை நடத்துவது வழக்கம். ஆனால் இந்தப் படத்திற்கு எந்த ஒரு நிகழ்ச்சியும் நடத்தாததால் அதிகமாக பாலிவுட்டில் வரவேற்பு இல்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே, குஷ்பு, விஜய், ராஷ்மிகாவுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட படத்தை வெளியிட்டு 'வாரிசு' படத்தில் குஷ்பு நடிப்பதை படக்குழு உறுதி செய்திருந்தது. விஜய்யும் "சிறிய வேடமாக இருந்தாலும் குஷ்பு பெருந்தன்மையோடு நடித்துக் கொடுத்தார்," என்று பாடல் வெளியீட்டு விழாவில் குறிப்பிட்டிருந்தார். ஆனால், குஷ்பு நடித்த காட்சிகள் எதுவும் படத்தில் இடம்பெறவில்லை. குஷ்பு உடல் எடை குறைத்த பிறகு வரும் முதல் படம் என்பதால் அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். அவர்களுக்கு இது ஏமாற்றமாக அமைந்துள்ளது.
விஜய் தொலைக்காட்சி ஒவ்வோர் ஆண்டும் 'நீயா நானா' நிகழ்ச்சி மூலம் சிறந்த மனிதருக்கு ஆளுமை விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. அந்த விருது தற்பொழுது நடிகர் கார்த்திக்கிற்கு கிடைத்து இருக்கிறது. கார்த்தி அவரது 'உழவன் பவுண்டேஷன்' மூலம் செய்து வரும் சமூகப் பணிகளுக்காகவும் 'விருமன்', 'பொன்னியின் செல்வன்', 'சர்தார்' என அடுத்தடுத்து மூன்று வெற்றிப் படங்களைக் கொடுத்ததற்காகவும் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சிறந்த களப்பணி ஆற்றி வரும் விவசாயிகளை அடையாளம் கண்டு, வெளியுலகுக்கு அவர்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவதே தன்னார்வத் தொண்டு நிறுவனமான உழவன் அமைப்பின் நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் 'வாத்தி' படத்திற்குப் பிறகு 'கேப்டன் மில்லர்' என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்திற்குப் பிறகு அவர் 'ராயன்' என்ற படத்தை இயக்க இருக்கிறார். அந்தப் படத்தில் காளிதாஸ் ஜெயராமன், துஷாரா விஜயன் நடிக்க இருக்கிறார்கள். இதற்கு முன்பு தனுஷ்
'பா.பாண்டி' என்ற படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.
முன்னணித் தெலுங்கு நடிகரான நந்தமூரி பாலகிருஷ்ணாவின் நடிப்பில் 'வீர சிம்ம ரெட்டி' படம் அமெரிக்காவில் உள்ள ஒரு திரையரங்கில் வெளியானது. அப்படத்தைக் காணச் சென்ற ரசிகர்கள், 'ஜெய் பாலையா' என்று கத்தியும் ஊதலால் ஊதியும் தாள்களைக் கிழித்து பறக்கவிட்டும் இந்தியாவில் திரையரங்குகளில் செய்வதுபோல செய்திருக்கிறார்கள். காதைக் கிழிக்கும்படியாக இருந்த அவர்களின் சத்தத்தைப் பொறுக்காத திரையரங்கு நிர்வாகம் காவலர்களின் உதவியுடன் படத்தைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு, அரங்கிலிருந்த ரசிகர்கள் அனைவரையும் வெளியேறும்படி அறிவுறுத்தியுள்ளது. ரசிகர்கள் வேறு வழியின்றி வெளியேறினர். தெலுங்குப் படம் வெளியாகும் திரையரங்குகளில் ரசிகர்களின் இத்தகைய அடாவடிகள் இடம்பெற்றது இது முதல் முறையன்று என்று அமெரிக்கக் காவல்துறை தெரிவித்தது.

