ஆணவக்கொலையை மையமாக வைத்து 'வர்ணாஸ்ரமம்' என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் சிந்தியா லெளர்டே கதையின் நாயகியாக நடித்துள்ளார். படத்தின் தயாரிப்பாளரும் அவர்தான்.
'பிக்பாஸ்' அமீர், வைஷ்ணவி ராஜ், ஸ்ரீராம் கார்த்திக், விஷ்ணு பாலா, சுகாசினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுகுமார் அழகர்சாமி இயக்கி உள்ளார்.
சிந்தியா அமெரிக்காவில் நன்கு அறிமுகமான பாடகி. தமிழ்ப் பாடல்களைப் பாட வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வந்தாராம்.
"அந்தச் சமயத்தில் அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது 'வர்ணாஸ்ரமம்' படத்தின் கதையை அவரிடம் விவரித்தேன். அது பிடித்துப் போனதால் நாயகியாக நடிக்க ஒப்புக்கொண்டார். பின்னர் அவரே தயாரிப்பாளராகவும் மாறியபோது படக்குழுவைச் சேர்ந்த அனைவருக்குமே மகிழ்ச்சி.
"இந்தப் படத்தில் தனக்குப் பிடித்தமான பாடலையும் பாடி உள்ளார்.
"தமிழ் சினிமாவில் பல படங்களில் ஆணவக்கொலையை மையமாக வைத்து கதைக்களங்களை அமைத்துள்ளனர். எனினும் அவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் 'வர்ணாஸ்ரமம்' படத்தை உருவாக்கி வருகிறோம்.
"படம் முழுவதும் நெஞ்சைப் பதறவைக்கும் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். ஆனால் எதுவுமே உண்மைக்கு மாறானதாக, சினிமாத்தனமாக இருக்காது. தீப் சக்ரவர்த்தியின் இசையும் பிரவீணாவின் ஒளிப்பதிவும் படத்துக்குப் பலம் சேர்த்துள்ளன. இந்தப் படம் புது விவாதங்களுக்கு வித்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

