ஓடிடி தளங்களில் வெளியாகும் படைப்புகள் சிறப்பாக இருப்பதாகச் சொல்கிறார் நடிகை வசுந்தரா.
அதுபோன்ற படங்கள், இணையத் தொடர்களில் நடிக்க விரும்புவதாகவும் அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
'பேராண்மை', 'தென்மேற்கு பருவக்காற்று', 'போராளி' உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் வசுந்தரா. இப்போது, 'கண்ணை நம்பாதே', 'தலைக்கூத்தல்' படங்களில் நடித்துள்ளார்.
"மு.மாறன் இயக்கியுள்ள 'கண்ணை நம்பாதே' படத்தில் உதயநிதி, பிரசன்னா, ஸ்ரீகாந்த் என முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இதில் உதயநிதியுடன் இணைந்து நடித்துள்ள காட்சிகள் விறுவிறுப்பாக அமைந்துள்ளன.
"தலைக்கூத்தல்' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இதில் சமுத்திரக்கனி ஜோடியாக நடித்துள்ளேன். இந்தப் படத்துக்கான அனைத்து வசனங்களும் படப்பிடிப்பின்போதே நேரடியாகப் பதிவு செய்யப்பட்டன. இந்த ஏற்பாடு புதிய அனுபவங்களைத் தந்தது," என்கிறார் வசுந்தரா.
நடிகை ஷ்ருதிஹாசனின் மனநலப் பிரச்சினை முற்றிவிட்டதாக வெளியான தகவல் குறித்து அவரே விளக்கம் அளித்துவிட்ட போதிலும், ஒருசிலர் விடு
வதாக இல்லை. அண்மையில் ஷ்ருதி நடித்த ஒரு தெலுங்குப் படத்தின் விளம்பர நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதில் ஷ்ருதி கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து அவரது மனநலப் பிரச்சினை பெரிதாகிவிட்டதாக இணைய வாசி ஒருவர் பதிவிட, ஷ்ருதி அவருக்குப் பதிலளித்துள்ளார். "எனக்கு காய்ச்சல் இருந்ததால் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை. எனினும் நீங்கள் மேற்கொண்டது நல்ல முயற்சி," என்று மறைமுகமாக இடித்துக்காட்டி உள்ளார் ஷ்ருதி. அவரது இந்தப் பதிலடியைப் பலரும் பாராட்டி உள்ளனர்.
'துணிவு' படத்தில் நடித்த அனுபவங்களை வாழ்நாள் முழுவதும் மறக்கவே இயலாது என்கிறார் அப்படத்தின் நாயகி மஞ்சு வாரியர். படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை அவர் சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவற்றில் அஜித்தும் அவரும் இயல்பாகப் பேசிக்கொண்டிருக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
"அஜித் சார்... நீங்கள் நீங்களாகவே இருப்பதற்கு மிக்க நன்றி," என்று குறிப்பிட்டுள்ளார் மஞ்சு.
அஜித்துடன் மீண்டும் இணைந்து நடிக்க விருப்பம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து அஜித் ரசிகர் கள் மஞ்சுவைப் பாராட்டி பின்னூட்டமிட்டு வருகின்றனர்.

