திரைச்செய்தி

திரைச்செய்தி

2 mins read

கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் 'மாமன்னன்', 'தசரா' படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன. இந்நிலையில் இவர் சந்துரு இயக்கத்தில் 'ரிவால்வர் ரீட்டா' என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். கீர்த்தி சுரேஷ் இரண்டு கைகளிலும் துப்பாக்கி ஏந்தியபடி நிற்கும் சுவரொட்டியை நடிகை சமந்தா நேற்று வெளியிட்டார்.

அண்மையில் வெளியான 'பாகுபலி', 'ஆர்ஆர்ஆர்', 'பொன்னியின் செல்வன்' போன்ற வரலாற்றுப் படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதனைத்தொடர்ந்து நடிகர் ரஜினிக்கும் வரலாற்றுப் படத்தில் நடிக்கவேண்டும் என்ற ஆசை பிறந்துள்ளது. அதனால் இயக்குநர் பி.வாசுவிடம் தன்னுடைய ஆசையைக் கூற, அவரும் விரைவில் ஒரு வரலாற்றுக் கதையுடன் சந்திப்பதாகக் கூறியிருக்கிறார். விரைவில் ரஜினியின் 171வது படத்தில் பி.வாசுவும் ரஜினியும் இணைவார்கள் என்று கூறப்படுகிறது.

ஜெயம் ரவி கடல் கொள்ளையராக நடிக்கும் 'பூலோகம்' படம் பிப்ரவரி 17 அல்லது 24ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்து இருக்கிறார்கள். இந்தப் படம் சென்ற ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று வெளியாக இருந்தது. சில காரணங்களால் படம் தள்ளிப்போனது. இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர் காவல் அதிகாரியாக நடிக்கிறார்.

விஜய் சேதுபதி நடிக்கும் முதல் இணையத்தொடர் 'பார்சி'. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி துணிச்சலும் நேர்மையும் மிக்க உயர் காவல் அதிகாரியாக நடிக்கிறார். கள்ளநோட்டு அச்சடிக்கும் ஷாகித் கபூர் தலைமையிலான கும்பலை எப்படி பிடிக்கிறார் என்பதுதான் இதன் கதை.

8 பாகங்களைக் கொண்ட இந்தத் தொடர் 'அமேசான் ப்ரைம்' வீடியோவில் பிப்ரவரி 10ஆம் தேதி வெளியாகிறது. விளம்பர நிகழ்ச்சிகளில் விஜய் சேதுபதிக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் மற்றொரு நடிகரான ஷாகித் கபூர் கோபத்தில் இருக்கிறாராம். அதனால் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மறுப்பதாக கூறப்படுகிறது.

விஜய் நடித்த 'வாரிசு' படத்தில் குஷ்பு நடிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், படத்தில் ஒரு காட்சியில்கூட உடல் இளைத்துப்போன குஷ்புவைக் காணமுடியவில்லை என்று பலரும் வருத்தம் தெரிவித்தனர். அதற்கு விளக்கம் அளித்த படக்குழு, படத்தின் நீளம் அதிகமாக இருந்ததால் அவருடைய காட்சிகளை வெட்டும்படி ஆனது. இதுபற்றி இயக்குநர் குஷ்புவிடம் சொல்லி அவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டதாகத் தெரிவித்துள்ளனர்.