தமிழ்த் திரையுலகின் ஜாம்பவான்களுடன் தம்மை நடிக்க வைத்ததற்காக இயக்குநர் தங்கர் பச்சானுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளதாகச் சொல்கிறார் யோகி பாபு.
தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் 'கருமேகங்கள் கலைகின்றன'. இதில் தனக்குரிய காட்சிகளில் நடித்து முடித்துள்ளார் யோகிபாபு.
"இந்தப் படத்தில் இயக்குநர்கள் பாரதிராஜா, கௌதம் மேனன், நடிகை அதிதி பாலன் எனப் பல திறமைசாலிகள் இணைந்துள்ளனர். அவர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு எல்லாருக்கும் அமைந்துவிடாது.
"தங்கர் பச்சான் இயக்கும் படம் என்பதால் தயக்கமின்றி கால்ஷீட் ஒதுக்கி நடிக்கத் தயாரானேன். காரணம், நமது கடந்தகால வாழ்க்கையை நினைவுக்கு கொண்டு வருபவர் அவர். 'அழகி', 'ஒன்பது ரூபாய் நோட்டு', 'சொல்ல மறந்த கதை' உள்ளிட்ட அவரது படங்கள் அனைத்துமே என்னை கவர்ந்தவை. அனைவரும் இந்தப் படைப்புகளைப் பார்த்து ரசிக்க வேண்டும்.
"மீண்டும் நல்ல குடும்பப் படத்தை உருவாக்கி உள்ளார் தங்கர் பச்சான். அவருடன் மீண்டும் இணைந்து பணியாற்ற வேண்டும். இந்தப் பயணம் நீடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அவர் வேகமாக மட்டுமல்ல, கோபத்துடனும் பணியாற்றுவார்.
"அதன் முடிவில் தரமான படைப்பு உருவாகும் என்பதில் சந்தேகமே இல்லை. இப்படத்தில் இறுதிக்காட்சி வரை என் பங்களிப்பு இருக்கும். எனது பாத்திரம் நகைச்சுவையாக அமைக்கப்பட்டுள்ளது," என்கிறார் யோகிபாபு.

