கடந்த ஆண்டில் வெளிவந்த 'ஆர்ஆர்ஆர்', 'கேஜிஎப் 2', 'விக்ரம்', 'பொன்னியின் செல்வன்', 'காந்தாரா' போன்ற தென்னிந்தியப் படங்கள் சுமார் 3,800 கோடி ரூபாய் வசூலித்தன. இந்த ஆண்டு தொடக்கத்தில் பொங்கலுக்கு வெளியான 'துணிவு', 'வாரிசு', 'வால்டர் வீரய்யா', 'வீரசிம்ஹா ரெட்டி' ஆகிய நான்கு படங்களும் இதுவரையிலும் ரூ.450 கோடி வசூலித்து இருக்கின்றன. இந்த வசூல் நிலவரம் பாலிவுட்டை கவலையில் ஆழ்த்தி இருக்கிறது.
நடிகர் விஜய் 'வாரிசு' படத்திற்குப் பிறகு மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார். குண்டர் கும்பல் கதையில் உருவாகும் இந்தப் படத்தில் திரிஷா, சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மிஷ்கின் உள்ளிட்டோர் நடிக்க இருக்கின்றனர். அவர்களுடன் 'பிக்பாஸ் சீசன் 6' நிகழ்ச்சியில் பிரபலமான இலங்கையைச் சேர்ந்த ஜனனியும் இந்தப் படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்க உள்ளாராம். படத்தில் இவர் விஜய்யின் மகளாக நடிப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றிய அறிவிப்பை படக்குழு விரைவில் அறிவிக்கும் என்றார் ஜனனி.
வெங்கட் பிரபு இயக்கி வரும் படம் 'கஸ்டடி'. இந்தப் படத்தில் நாயகனாக நாக சைதன்யாவும் நாயகியாக கீர்த்தி ஷெட்டியும் நடித்து வருகிறார்கள். இந்தப் படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி வருகிறது. அரவிந்த்சாமி இந்தப் படத்திலும் வில்லனாக நடிக்கிறார். இதில் சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் முதல் சுவரொட்டியும் காணொளியும் வெளியாகி பலரின் கவனத்தைப் பெற்று வருகிறது.
நடிகர் கமல்ஹாசன் 'இந்தியன் -2' படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்க இருக்கிறார். அவரது 234வது படத்தை 'ரெட் ஜயன்ட் மூவிஸ்' தயாரிக்கிறது. இந்தப் படத்தில் ஏழு மாநிலங்களைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர்கள் அனைவரும் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடிக்க இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
'பொன்னியின் செல்வன்' படத்திற்குப் பிறகு விக்ரம் பிரபு நடித்திருக்கும் படம் 'பாயும் ஒளி நீ எனக்கு'. இதை ராஜமவுலியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கார்த்திக் அத்வைத் இயக்குகிறார். இவர் பல விளம்பர படங்களையும் இயக்கி உள்ளார். வாணிபோஜன், ஆனந்த், விவேக் பிரசன்னா, வேல ராமமூர்த்தி உள்பட பலர் நடித்துள்ளனர். கன்னட நடிகர் டாலி தனஞ்செயா இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும் என்று படக்குழு கூறியுள்ளது.
தனுஷின் 50வது படத்தை 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக சுவரொட்டி வெளியாகி இருக்கிறது. 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிப்பில் தனுஷ் நடித்த 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

