'கட்டா குஸ்தி' படத்தை அடுத்து விஷ்ணு விஷால் நடிப்பில் 'மோகன்தாஸ்' என்ற படம் வெளியாக உள்ளது. இதுதவிர 'ஆர்யன்', 'லால் சலாம்' படங்களில் விஷ்ணு விஷால் நடித்து வருகிறார். இதையடுத்து 'எப்ஐஆர் 2' படத்திலும் நடிக்க உள்ளார். இந்நிலையில் இவரை வைத்து 'முண்டாசுப்பட்டி', 'ராட்சசன்' என இரண்டு வெற்றிப் படங்களைத் தந்த இயக்குநர் ராம்குமாருடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். அந்தப் படம் 'ராட்சசன்' படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
பொங்கலுக்கு வெளியான 'வாரிசு', 'துணிவு' படங்கள் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் பாபி சிம்ஹா, ஷிவேதா நடித்திருக்கும் 'வல்லவனுக்கும் வல்லவன்' என்ற படமும் திரையரங்குகளில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்தப் படம் 2016ஆம் ஆண்டு வெளிவரவேண்டியது. ஆனால் சில காரணங்களால் படம் தடைப்பட்டு ஆறு ஆண்டுகள் தாமதமாக தற்போது வெளி வந்திருக்கிறது.
ஷ்ருதிஹாசன் நடித்திருக்கும் இரண்டு தெலுங்குப் படங்களும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் இவருக்கு 'இந்திய சாதனையாளர்' என்று விருது கிடைத்திருக்கிறது. இவர் நடிகையாக, பாடகியாக, இசை அமைப்பாளராக, சமூக சேவகியாக பன்முகம் கொண்டவராக இருப்பதால் இவருக்கு இந்த விருது கிடைத்து இருக்கிறது. இந்த விருதை அமைச்சர் அனுராக் தாக்கூர் வழங்க ஷ்ருதிஹாசன் பெற்றுக்கொண்டார். அப்போது அவர், "இந்த விருதைப் பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அதற்காக நான் நடுவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். கலைப் பணிக்காக பாராட்டப்படுவது எப்போதுமே மகிழ்ச்சியான ஒன்று. முக்கியமான விஷயங்களுக்கு எனது தளத்தைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பைப் பெற்றதற்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்," என்று தெரிவித்தார்.
இயக்குநர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று மீண்டும் திருப்பதியில் தொடங்கியுள்ளது. திருப்பதி மலைப்பகுதிக்கு அருகே அமைக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான அரங்கில் நடிகர் கமல்ஹாசனும் சித்தார்த்தும் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்தப் படத்தில் கமலுடன் சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன் 2' படத்தின் முன்னோட்டக் காட்சி மார்ச் மாதம் ஒன்றாம் தேதி வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்து இருக்கிறது. மேலும் படம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் என்று படத்தின் இயக்குநர் மணிரத்னம் அறிவித்து இருக்கிறார்.

