பி.ஆர்.தமிழ்செல்வம் தயாரிப்பில், வேலன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'மெய்ப்பட செய்'.
ஆதவ் பாலாஜி நாயகனாகவும் மதுனிகா நாயகியாகவும் அறிமுகமாகி உள்ளனர்.
இவர்களுடன் தயாரிப்பாளர் தமிழ்செல்வம், ஆடுகளம் ஜெயபாலன், ஓ.ஏ.கே.சுந்தர், இயக்குநர் ராஜ்கபூர், ராகுல் தாத்தா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பரணி இசையமைக்க, ஆர்.வேல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைக் கண்டிக்கும் படைப்பாக இந்தப் படம் உருவாகி உள்ளதாம்.
"நம் சமூகத்தில் பாலியல் குற்றங்கள் தொடர் கதையாகி வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களைச் சட்டம் எப்படி பார்க்கிறது, அவர்களுக்கான நியாயம் உடனடியாக கிடைக்கிறதா என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளோடு இப்படம் உருவாகி உள்ளது.
பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதோடு, பாலியல் குற்றங்கள் குறைவதற்கான வழியையும் சொல்லி இருக்கிறது.
"மேலும் எந்த தமிழ்ப் படத்திலும் சொல்லாத சில விஷயங்களை இதில் அலசியுள்ளோம்.
"இந்தப் படம் வெளியானால் நிச்சயம் பாலியல் குற்றங்கள் குறையும்," என்று நம்பிக்கையுடன் பேசுகிறார் இயக்குநர் வேலன்.