ஜெர்மனியில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ரன் லோலா ரன்’ என்ற படத்தை தமிழில் மறுபதிப்பு செய்துள்ளனர். ‘ரன் பேபி ரன்’ என்ற பெயரில் உருவாகி உள்ள இப்புதிய படம் வெளியீட்டிற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
அதற்குக் காரணம் இயக்குநர் ஜியென் கிருஷ்ணகுமார். மலையாளத்தில் பிருத்விராஜ் நடித்து வெற்றிபெற்ற ‘தியான்’ படத்தின் இயக்குநர். தனது அடுத்த படத்தை தமிழில்தான் இயக்க வேண்டும் என்ற முடிவில் உறுதியாக நின்று, தமிழில் அறிமுகமாகி உள்ளார் கிருஷ்ணகுமார்.
‘ரன் பேபி ரன்’ படத்தின் நாயகன் ஆர்.ஜே.பாலாஜி. நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருப்பது பலரையும் வியப்பில் புருவம் உயர்த்த வைத்துள்ளது. இனி இயக்குநர் சொல்வதைக் கேட்போம்.
“இந்தப் படத்துக்கான கதையை எழுதி முடித்த உடனேயே, ஆர்.ஜே.பாலாஜிதான் என் கண் முன் தோன்றினார். நான் நிறைய தமிழ்ப் படங்களைப் பார்ப்பேன். அவற்றுள் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் படங்களும் அடங்கும். அவர் இதுவரை நகைச்சுவையான பாத்திரங்களைத்தான் ஏற்றுள்ளார். திகில் படத்தில் நடித்ததாக நினைவில்லை.
“எனது படத்தில் அவருக்கு என நகைச்சுவைப் பகுதிகள் ஏதும் இல்லை. உண்மையைச் சொல்வதானால், இந்தப் படத்துக்கான நகைச்சுவைக் காட்சிகளில் அவர் இருக்க மாட்டார். நகைச்சுவை வசனங்களும் பேச மாட்டார்.
“மறுபக்கம், ஐஸ்வர்யா ராஜேஷ் மாறுபட்ட கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். அவர் இதுவரை ‘சீரியஸ்’ வேடங்களில்தான் அதிக கவனம் செலுத்தி உள்ளார் என்பது தெரியும். அப்படிப்பட்ட ஐஸ்வர்யாவை மாறுபட்ட கோணத்தில் பார்க்க முடியும். அவரது தோற்றம், வசனங்கள் ரசிகர்களை நிச்சயம் கவரும்,” என்கிறார் ஜியென் கிருஷ்ணகுமார்.
மலையாளத்தில் இதே தலைப்பில் ஏற்கெனவே மோகன்லால் நடித்த திரைப்படம் வெளியாகி உள்ளது. எனினும் அதற்கும் தனது படத்துக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்கிறார்.
தனது கதைக்குப் பொருத்தமாக இருக்கும் என்பதால்தான் இந்தத் தலைப்பை தேர்வு செய்ததாக விளக்கம் அளித்துள்ளார்.
“ஆர்.ஜே. பாலாஜியிடம் கதையை விவரித்த அடுத்த நிமிடமே கதை பிடித்திருப்பதாகக் கூறி நடிக்கச் சம்மதித்தார். படப்பிடிப்பின்போது நான் எதிர்பார்த்தது போலவே அவர் நடித்தபோது எனக்கு மிகுந்த ஆச்சரியம் ஏற்பட்டது.
“இதுபோன்ற கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்கும் கதாநாயகர்களைவிட பாலாஜிதான் பொருத்தமான தேர்வாக இருப்பார் என நினைத்தேன். எனது எதிர்பார்ப்புகள் வீண்போகவில்லை.
“ஐஸ்வர்யா ராஜேஷ் எப்படி நடிப்பார், எந்த அளவுக்கு அர்ப்பணிப்புடன் செயல்படுவார் என்பது நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
“அவர் நடிக்கும் படங்களில் மட்டுமே நாயகனுக்கு இணையாக நாயகிக்கும் முக்கியத்துவம் இருக்கும். காரணம், அதுபோன்ற கதை அமைப்புக்கும் கதாபாத்திரத்துக்கும் அவர் மட்டுமே பொருத்தமாக இருப்பார். இது நாயகனை மையப்படுத்தும் கதை என்பதை அவரிடம் தொடக்கத்திலேயே தெளிவாகச் சொல்விட்டேன். கதையில் நாயகிக்கு உள்ள முக்கியத்துவத்தையும் விவரித்தேன். அவருக்கும் கதை பிடித்துப் போனதால் தயக்கமின்றி நடிக்கச் சம்மதித்து வியப்பில் ஆழ்த்தினார்.
“கதாநாயகன், நாயகிக்கு பட உருவாக்கம் தொடர்பில் சில சந்தேகங்கள், சிக்கல்கள் இருக்கக்கூடும். அதுகுறித்து தொடக்கத்திலேயே தெளிவாகப் பேசிவிட்டால் போதும், படத்தின் வெற்றி பாதி உறுதியாகிவிடும். அதுபோன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது,” என்கிறார் ஜியென் கிருஷ்ணகுமார்.