இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான எம்.எஸ்.தோனி படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி உள்ளார்.
அவரது தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாராகும் முதல் தமிழ்ப் படத்துக்கு 'எல்ஜிஎம்' ('லெட்ஸ் கெட் மேரீட்') எனத் தலைப்பு வைத்துள்ளனர்.
ரமேஷ் தமிழ்மணி இயக்கும் இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடிக்க, இவானா நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார். யோகி பாபு முக்கியக் கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார்.
இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் தோனியின் மனைவி சாக்ஷி கலந்துகொண்டு 'கிளாப்' அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.
இதையடுத்து பேசிய அவர், நல்ல அர்த்தமுள்ள கதைகளை திரைப்படங்களாக மாற்றுவதற்கு தங்கள் நிறுவனம் முன்னுரிமை அளிக்கும் என்றார்.
"எங்களுடைய குழுவுடன் இந்த நிகழ்வில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் பல நல்ல கதைகளை திரைப்படவடிவில் ரசிகர்களுக்கு வழங்குவதில் ஆவலுடன் உள்ளோம்," என்றார் சாக்ஷி.
நாட்டின் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் உள்ள ரசிகர்களிடம் அர்த்தமுள்ள கதைகளைக் கொண்டு சேர்ப்பதே தோனி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் நோக்கமாக உள்ளது என்றார் அந்நிறுவனத்தின் வணிகப்பிரிவுத் தலைவர் விகாஸ் ஹசிஜா.
"எங்கள் நிறுவனம் நல்ல நோக்கத்துக்காகத் தொடங்கப்பட்டுள்ளது. நாங்கள் நல்ல கதைகளைத் தேடிக் கொண்டிருக்கிறோம். தமிழில் மேலும் பல படங்களைத் தயாரிக்கவேண்டும் என்பதே எங்களுடைய முதன்மை விருப்பம். 'எல்ஜிஎம்' படம் நீண்ட, பயனுள்ள ஆட்டத்துக்கான தொடக்கம். தமிழ்த் திரையுலகில் நல்லதொரு மாற்றத்தை உருவாக்கவும் விரும்புகிறோம்," என்றார் விகாஸ்.