கூலிப்படைகளை மையப்படுத்தி உருவாகிறது ‘கொட்டேஷன் கேங்’. பிரியாமணி நாயகியாக நடித்துள்ளார்.
தலைப்பு உள்பட இப்படம் தொடர்பாக வெளியாகும் தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளன.
ஜாக்கி ஷ்ராஃப், சாரா, ஜெயபிரகாஷ், அக்ஷயா, உள்ளிட்ட பலர் முக்கியப் பாத்திரங்களில் வருகிறார்கள். பாலாவிடம் உதவியாளராக இருந்த விவேக் கண்ணன் இயக்கி உள்ள படம் இது.
"இது பணத்துக்காக கொலைகள் செய்யும் கூலிப்படையினர் பற்றிய உணர்ச்சி மிகுந்த படமாக இருக்கும். இதை அடிதடிப் படமாகக் கருத வேண்டாம்.
"கூலிப்படையினர் குறித்து பல்வேறுவிதமான கருத்துகள் வலம் வருகின்றன. அவர்களுடைய வாழ்க்கைச் சூழல் எவ்வாறானதாக உள்ளது என்பதை உணர்வுபூர்வமாக காட்சிப்படுத்தி உள்ளேன்.
"இந்தியா முழுவதும் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் இந்தப் படத்தை ரசித்துப் பார்க்க முடியும். அவர்களால் திரையில் தோன்றும் காட்சிகளுடன் தங்களைப் பொருத்திக்கொள்ள முடியும்.
"டிரம்ஸ் சிவமணி மிகச் சிறந்த இசைக்கலைஞர். அவர் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். அருண் பத்மநாபனின் ஒளிப்பதிவும் இப்படத்துக்கான பலங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.
"இதுபோன்ற வித்தியாசமான கதைக்களத்துக்கு ஏற்ப ஒளிப்பதிவு செய்வது மிகப்பெரிய சவால். அதில் அவர் வெற்றி பெற்றுள்ளார்," என்கிறார் இயக்குநர் விவேக் கே.கண்ணன்.