பிரபல நடன இயக்குநர் பிருந்தா இயக்கிய முதல் திரைப்படமான 'ஹேய் சினாமிகா' என்ற திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் அவர் இயக்கத்தில் உருவாகி வரும் இரண்டாவது திரைப்படம் 'தக்ஸ்'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வெளியாக இருக்கும் நிலையில் நேற்று இந்தப் படத்தின் முன்னோட்டக்காட்சி வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிறைக்குள் இருக்கும் அதிரடி சண்டைக் காட்சிகளாக உள்ளன. சிறைக்குள் நாயகனே கைதியாக அறிமுகப்படுத்தப்படுவதால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் 'தக்ஸ்' திரைப்படம் உருவாகியுள்ளது.
விஜய் நடிக்கும் 'தளபதி 67' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் நடிக்கும் வேடத்தின் புகைப்படம் வெளியாகி உள்ளது. அதில் அவர் நீண்ட மீசையுடன் கும்பல் கூட்டத்தைச் சேர்ந்தவர்போல காட்சியளிக்கிறார். அர்ஜூனின் இந்த வித்தியாசமான வேடம் பலரையும் ஈர்த்து வருகிறது.
ஹாலிவுட்டில் வெற்றி பெற்ற 'காட்ஸில்லா', 'அவதார்' உள்ளிட்ட படங்களில் பணிபுரிந்த டிஜிட்டல் நிறுவனம் தற்போது வெற்றிமாறன் இயக்கும் 'வாடிவாசல்' படத்தில் இணைந்துள்ளதாகவும் அந்தப் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளை அமைக்கும் பணிகளை ஹாலிவுட் டிஜிட்டல் நிறுவனம் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. அதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

