திரைத் துளி­கள்

திரைத் துளி­கள்

2 mins read
bb8527c4-9cc1-4c49-8109-c0c80adca7cd
-
multi-img1 of 4

 விவசாயம் செய்வது மனதுக்கு பெரும் நிறைவு அளிப்பதாகச் சொல்கிறார் நடிகர் பிரகாஷ்ராஜ் (படம்).

"சினிமாவில் எத்தனை கோடிகளைச் சம்பாதித்தாலும் விவசாயத்தில் கிடைக்கும் குறைவான தொகைக்கு ஈடாகாது. விவசாய சம்பாத்தியம் மிகப்பெரிய மனநிறைவு கொடுக்கிறது," எனவும் அவர் கூறியுள்ளார். தென்னிந்தியத் திரைப்படங்களில் வில்லன், குணசித்திர வேடங்களில் அதிக அளவில் தலைகாட்டி வரும் பிரகாஷ் ராஜ், அவ்வப்போது தன் வயல்கள், தோட்டங்களில் விவசாயம் செய்து வருகிறார். அதோடு, இளையர்களையும் விவசாயம் செய்யும்படி ஊக்குவித்து வருகிறார். "நாம் விளைவிக்கும் உணவுப் பொருள்களைச் சாப்பிட்டு ஏராளமானோர் பசியாறுவார்களே என்பதை நினைக்கும்போது மனதில் இனம்புரியாத ஓர் ஆத்ம திருப்தி கிடைக்கிறது," என்றார் பிரகாஷ்ராஜ்.

 'பத்து தல' படத்தில் நடித்து முடித்துள்ளார் நடிகர் சிம்பு. அவரது அடுத்த படத்திற்கான அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். இச்சூழலில், கோகுல் இயக்கத்தில் சிம்பு நடிக்க இருந்த 'கொரோனா குமார்' படத்தில் இருந்து அவர் விலகிவிட்டதாகவும் அவருக்குப் பதிலாக 'லவ் டுடே' படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் (படம்) நாயகனாக நடிக்கவிருப்பதாகவும் கோலிவுட் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 கனடாவில் படித்து வந்த நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்ஜய் (படம்), தற்போது கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு திரைப்பட இயக்கத்தில் ஆர்வம் காட்டி வருகிறார். சஞ்சய் குறும்படம் ஒன்றை இயக்குவது போன்ற காணொளி இணையத்தில் வெளியானதை அடுத்து, "தாத்தாவுக்கு தப்பாத பேரன்," என்று ரசிகர்கள் பாராட்டி உள்ளனர். சஞ்ஜய் தன் தந்தையைப் போலவே சினிமாவில் நடிகராக கால் பதிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தாத்தா எஸ்.ஏ. சந்திரசேகர் பாதையில் இயக்குநராகக் களம் இறங்கியுள்ளார். படம் இயக்குவதற்கு தனக்குப் பிடித்துள்ளதாகவும் நடிப்பில் அந்த ஆர்வமில்லை என்றும் கூறி அண்மையில் கிடைத்த திரைப்பட வாய்ப்பை உதறிவிட்டுள்ளார் ஜேசன் சஞ்ஜய்.

தமிழ்ச் சினிமாவில் 1990களில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த சுகன்யா (படம்), கடந்த 2002ல் ஸ்ரீதர் ராஜகோபால் என்பரைத் திருமணம் செய்து, ஒரே ஆண்டில் விவாகரத்து பெற்றுவிட்ட நிலையில், 'டூரிங் டாக்கீஸ்' என்ற யூடியூப் ஒளிவழிக்கு மனம்திறந்து நேர்காணல் அளித்துள்ளார். அதில், "பிடித்திருந்தால் சேர்ந்து வாழலாம். இல்லையெனில், இருவரும் கருத்தொரு மித்து பிரிந்துவிடுவதுதான் சரி. அக்கம்பக்கத்தினர் என்ன சொல்வார்கள் என யோசிக்கக்கூடாது. பெண்கள் துணிந்து முடிவு எடுக்கவேண்டும்," என்று கூறியுள்ளவர், "மறுமணம் குறித்து நான் இதுவரை யோசிக்கவில்லை. அதேசமயம் அதை வேண்டாம் என்றும் சொல்லவில்லை. தற்போது எனக்கு 50 வயதாகும் நிலையில், இனிமேல் திருமணமாகி குழந்தை பிறந்து அந்தக் குழந்தை என்னை அம்மா என்று கூப்பிடுமா அல்லது பாட்டி என்று கூப்பிடுமா? எது நடக்கவேண்டுமோ அது கண்டிப்பாக நடக்கும்," எனக் கூறியுள்ளார்.